தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ் மற்றும் காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயில் முத்து, தாமஸ் ஆகிய 9 பேரையும் கொலைக் குற்றவாளிகள் என அறிவித்தார்.
2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஊரடங்கு காலத்தில் நடந்த இந்த கொடூரமான லாக்-அப் மரண வழக்கில், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வலுவான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 30-ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு பெரும் ஆறுதலாகவும், அதிகார அத்துமீறலுக்கு எதிரான ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
