Home Uncategorized சத்யமேவ ஜெயதே…!

சத்யமேவ ஜெயதே…!

உலகில் அனைத்து நாடுகளுமே ஒரு காலத்தில் பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டிருக்கின்றன. அவர்களின் காலம் முடிவடைந்து, இன்று பெரும்பாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடைபெற்று வருகின்றன.  ஆங்காங்கு ஒரு சில நாடுகள் மன்னராட்சியின் பிடியில் இருப்பினும், உண்மையில் அவைகூட பெயரளவிற்குத்தான் . மற்றபடி அங்கெல்லாம் ஜனநாயகமே கோலோச்சுகிறது. அத்தகைய ஒவ்வொரு தேசமும் தன் அளவில் நெடிய பாரம்பரியமும் வானளாவிய பெருமைகளும் கொண்டவையே. 

மன்னர்களின் ஆட்சியில்  அவரவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தினை அடையாளப்படுத்திக் கொள்ள  இலட்சினைகள் (லோகோ), கொடிகள் ஆகியவற்றினை பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான மன்னர்கள் தங்களின் கொள்கை முழக்கத்தினை; தங்கள் நாட்டின் குறிக்கோளை வாசகங்களாக கொண்டிருந்த வரலாறுக் குறிப்புகள் மிகக்குறைவே இல்லை. 

ஜனநாயக ரீதியிலான ஆட்சியில் பெரும்பாலான நாடுகள் தங்கள் கொள்கை முழக்கத்தினை குறிக்கோளுரை என்கிற பெயருடன் தங்கள் அரசின் இலட்சினைகளில் பயன்படுத்தி வருகின்றன. 

நாட்டில்  அரசுகள் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பேற்கலாம். அப்படி  ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளின் கொள்கை முழக்கம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அங்கு  ஆட்சிப் பொறுப்பேற்றபின் அந்த நாட்டின் குறிக்கோளுரையை மட்டுமே அலுவல் ரீதியிலாக பயன்படுத்தி வருகின்றன. இது வரையறுக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம். 

மேலே கூறப்பட்டவற்றின் அடிப்படையில், 1947 –ல் அந்நிய ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து நமது பாரத தேசம் விடுதலை பெற்ற பிறகு, மக்களாட்சிக்கான அடித்தளத்திற்கு பல்வேறு விஷயங்கள் முறைப்படி கட்டமைக்கப்பட்டன. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட தேசியக்கொடி, தேசிய கீதம், இப்படி பல அம்சங்கள் முடிவானது. அவ்வகையில் தேசிய இலட்சினையாக அசோகரின் சாரநாத் தூண் (நான்கு சிங்கங்கள்), ஏற்கப்பட்டது. அந்தத் தூணில் சிங்கங்களின் கால்களுக்குக் கீழே “தேவநாகரி” எழுத்து வடிவத்தில் “சத்யமேவ ஜயதே”என அசோகரால் பொறிக்கப்பட்டிருந்தது. 

”சத்யமேவ ஜயதே” என்றால் “வாய்மையே வெல்லும்”  என்பதாகும். இத்தகைய பொருள்படும் வாசகம்  யாரால்? எப்போது? எங்கே உருவாக்கப்பட்டது?  இதற்கான பதிலை இப்போது தெரிந்து கொள்ளலாம். 

பாரதநாட்டின் பெருமைக்குரிய பல்வேறு அம்சங்களில் மிக முக்கியமானவை சனாதன தர்மம் என பொருள் கொள்ளப்படும் இந்து மதத்தின் புனிதமான அடிப்படையாக கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதம் உள்ளிட்ட நான்கு வேதங்கள் ஆகும். அவை ஒவ்வொன்றின் முடிவிலும் அவற்றின் சாராம்சங்களாக விளக்கங்கள் இடம்பெற்றிருக்கும். அவை உபநிஷதங்கள் எனப்படும். எண்ணிக்கையில் பலவான அவை ஒவ்வொன்றிற்கும் ஆதிசங்கரர், மத்வர், மற்றும்  ஸ்ரீ இராமானுஜர் போன்றோர் அவரவர் காலங்களில் விளக்கவுரைகள் எழுதியுள்ளனர்.  

சமஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட அந்த உபநிஷதங்களில் “சத்யமேவ ஜயதே” என்னும் வாசகமானது  அதர்வண வேதத்தின் ஒரு கூறாக ”முண்டக  உபநிஷத”த்தில்  இடம் பெற்றதாகும். இது ஆங்கீரஸ முனிவர் செளனகர் என்கிற முனிவருக்கு விளக்கம்தந்து உபதேசித்தது.  

இவ்வுலகத்தில் விஞ்ஞானம் மாற்றம் பெற்றுக்கொண்டேயிருக்கும். ஆனால், பிரபஞ்சத்தின் மூலப்பொருளான “பிரம்மம்”என்கிற ஒன்றை அடைய வழி வகுக்கும் மெய்ஞானத்தின் சாராம்சம் என்றென்றும் மாறாதது. பிரம்மத்தினை நோக்கிய ஆத்ம பூர்வமான தேடலிலும், லெளகீக வாழ்வு எனப்படும் சம்சாரபந்தத்திலும்  மாறாமல் நிலைபெற்றிருப்பது  வாய்மை எனப்படும் “சத்யம்” மட்டுமே. 

இந்த உண்மையானது இந்துமதமான சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், தேசம், இனம், மொழி, மதம் மற்றும் நாகரீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு கடந்து இன்றுமட்டுமல்ல இந்த உலகம் உள்ளளவும் நிலைபெற்றிருக்கும். 

இத்தகைய சிறப்பான வாசகத்தினை கிறிஸ்து பிறப்பிற்கும் சுமார் 250 ஆண்டுகளுக்கும்  முன்னரே  தன் பொற்கால ஆட்சிகாலத்தில் கல்வெட்டாக பொறித்து வைத்த மாமன்னர் அசோகரின் புகழைப் போற்றுவதுடன், உலகத்தின் குருவாக பாரதம் சிறந்து விளங்க இதனையே உயிர்மூச்சாகக் கொண்டு இன்றும் நடைபோடுகிறது. 

சத்யமேவ ஜெயதே.

 

Exit mobile version