Home Uncategorized சென்னையும், பிருங்கியும்…!

சென்னையும், பிருங்கியும்…!

பிருங்கி மாமுனிவர்: 

இன்றைய காலத்தில் குறிப்பிட்ட ஒரு திரைப்பட நடிகரையோ அல்லது நடிகையையோ  மட்டும் ரசிக்கும் தீவிர ரசிகர்கள் இன்று பலரும் உண்டு. இதேபோல் ஆன்மீகத்திலும் தங்களுக்கு இஷ்டமான ஒரு தெய்வத்தை மட்டுமே வணங்கக்கூடியவர்கள் இன்றும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் முதன்மையானவர் பிருங்கி முனிவர் என்பவர்.

கயிலைநாதன் சிவபெருமானை மட்டுமே வணங்கி வழிபடக்கூடியவர் பிருங்கி முனிவர். வேறெவரையும் கண்டுகொள்ளவே மாட்டார். இவர்  சிவனை நேரில் வணங்க ஒருமுறை கயிலை மலைக்குச் சென்றார்.  அப்போது அங்கே சிவனாருடன் பார்வதியும் இருந்தார். பிருங்கி முனிவர் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிவனை மட்டும் வணங்குவதால் ஏற்கனவே கோபத்தில் இருந்த பார்வதி அன்னை, இப்போது பிருங்குவின் வருகையை ஓரக்கண்ணால் கண்டார். “இப்போது என் கணவரான சிவனுடன் அருகில்தானே அமர்ந்துள்ளேன்.  அவரை வலம் வரவேண்டுமெனில் என்னையும் சேர்த்துதானே வலம்வர முடியும் !  அப்படியானால் சிவனை மட்டும் வணங்கும் பிருங்கியின் பிடிவாதம் செல்லுபடியாகாமல் போகத்தான் போகிறது !” என நடக்க இருப்பதை எதிர்பார்த்திருந்தார். 

அங்கே வந்த பிருங்கி முனிவரோ அம்மையும் அப்பனும் ஒன்றாக அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டார். ஒருகணம் சிந்தித்தார். சட்டென தன் தவ வலிமையால் ஒரு வண்டு உருவமெடுத்து சிவனை மட்டும் மும்முறை வலம்வந்து வணங்கிவிட்டு, அன்னை பார்வதியை  ஏறெடுத்தும் பாராமல் தன் போக்கில் சென்றுவிட்டார்.  இது அன்னைக்கு மேலும் ஆத்திரமூட்டியது. 

இப்பிரச்சினையை மையமாகக் கொண்டு சிவனுக்கும் பார்வதிக்கும் மோதல் உண்டானது. அதன் மூலம் பிரிவு, பின் சச்சரவுகளைக் களைந்து மீண்டும் இணைந்தனர்.  இக்கட்டத்தில்தான்  சிவன் தன் உடலின் இடப்பகுதியினை  பார்வதிக்கென தந்து விட்டார். இந்த திருக்கோலமே அர்த்த நாரீஸ்வரர் திருக்கோலம். 

சாபத்திற்கு ஆளாகுதல்

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் அம்மையும் அப்பனும் இருக்கும்போது மீண்டும் பிருங்கி முனிவர் வந்தார். இறைவன் இறைவியின் கோலத்தைக் கண்டு ஒரு கணம் திகைத்தார். பார்வதிக்கோ “இப்பொழுது என்ன செய்யப்போகிறாய்?”  என்பது போன்ற பார்வையுடன் ஜாடையாக நோக்க, பிருங்கி முனிவர் ஒருகணம் கூட திகைக்கவேயில்லை. தன் வலிமையைப் பயன்படுத்தி ஒரு வண்டு உருவம் எடுத்து,  இறைவனின் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தைக்  குடைந்து  சிவனை மட்டும் வலம் வந்தார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போனார் பார்வதி அம்மை. இதனால் பிருங்கி முனிவர் பார்வதிதேவியின் சாபத்திற்கு ஆளானார். இதனால் பிருங்கியிடம் சிவசக்தி ஆற்றலில் சிவம் மட்டுமே எஞ்சி, சக்தி விடை பெற்றது. ”சக்தி” விடைபெற்றதால், பலமிழந்து நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலைஏற்படும் சாபத்திற்கு ஆளானார். சிவபெருமான் தன் தீவிர பக்தனான பிருங்கி மாமுனிவரை பூலோகத்தில் தவமியற்றித் தொடரும்படி பணித்தார். இறைவனின் ஆணையை ஏற்று பிருங்கியும் பூலோகத்தில் ஒரு சிறிய மலைப் பகுதியில் தவநிலை மேற்கொண்டார்.  

பரங்கி மலை:

பலமிழந்து போனார். அப்போதும் கூட அவர் தனது சிவவழிபாடு மட்டும் செய்வதில் வைராக்கியமாக விளங்கினார். அதனால் மனமிரங்கிய சிவன் அவருக்கு மூன்றாவதாக ஒரு கால் தந்து இருக்கும்படி வரம்தந்து காத்தருளினார். மேலும் ஊன்றிக்கொள்வதற்கு கோல் (குச்சி) ஒன்றையும் வழங்கினார். அதன்பின் சாபத்தின் விமோசனமாக அம்மலையின் அடிவாரத்தினையொட்டிய  ஓரிடத்தில் பிருங்கி மாமுனிவருக்கு நந்தி ரூபமாக காட்சிதந்தருளினார். பிருங்கி முனிவர் கடுந்தமியற்றிய மலை ”பிருங்கி முனிவர் மலை” என பிற்காலத்தில் அழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் மருவி ”பரங்கி மலை” என்றானது. 

புராண காலம், சரித்திர காலம் ஆகிய அனைத்திலும் சனாதன தர்மத்தின் அடிப்படையில் புனிதத் தன்மையோடு விளங்கிவந்த, இந்த மலையானது பாரதநாடு ஆங்கிலேயர்கள் வசமானபின், அதன் தொன்மை, பெருமை ஆகியன முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு,  கிறிஸ்தவ மதப் புனிதரென அறிமுகமான தோமையார் என்பவர் இங்கு குடியேறியதாக கருத்துருவாக்கம் செய்யப்பட்டு, அவரின் பெயரால் ”புனித தோமையார் மலை” என அழைக்கப்படலானது. கிறிஸ்தவ தேவாலயம் எழுப்பப்பட்டது. பின் வந்த வம்சாவழியினர் அனைவருமே எவ்விதமான புரிதலுமின்றி அதனை அப்படியே நம்பும்நிலை இன்றுவரை தொடர்கிறது என்பது வருந்தத்தக்கது. இது ஒரு திரிபு வரலாறு. 

மவுண்ட் ரோடு:

செயிண்ட் தாமஸ் மவுண்ட் என ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது.  சென்னையில் கடலோரத்தில் ஆங்கிலேயர்களின் இராணுவமுகாம் மற்றும் நிர்வாக அலுவலகம் ஆகியன அமைக்கப்பட்ட து. அது புனித ஜார்ஜ் கோட்டை என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. இதேபோல் ஜார்ஜ் டவுன் பகுதி ஆங்கிலேயர்களின் புழக்கம் அதிகமிருந்தன.  ஆக கோட்டைப் பகுதியிலிருந்தும், அதிக புழக்கத்திலிருந்த பகுதியிலிருந்தும் இந்த கோட்டையிலிருந்து மலைவாசஸ்தலமான புனித செயிண்ட் தாமஸ் மவுண்ட்டிற்கு வரும் ஒரு சாலையை ஆங்கிலேயர்கள்  பிரதானமாக அமைத்து  வெகுவாகப் பயன்படுத்தினர். 

”மலை குன்று ”என்பது ஆங்கிலத்தில் “மவுண்ட்” என்பதாகும். ஆகவே ”மவுண்ட்டிற்கு போகும் சாலை” என வழங்கப்படலாயிற்று. அதுவே இன்றும் “மவுண்ட் ரோடு” என அழைக்கப்படுகிறது. 

ஆதம்பாக்கம்

பிருங்கி மாமுனிவருக்கு சிவன் நந்தி ரூபத்தில் காட்சிதந்ததன் அடிப்படையில் சிவன் கோயில் எழுப்பபட்டது. அதனால் இறைவனின் பெயர் நந்தீஸ்வரர் என்றும், இறைவியின் பெயர் ஆவுடைநாயகி என்றும் ஆனது. 

இத்திருக்கோயிலானது  10 ஆம் நூற்றாண்டில்”ஆதானி” எனும் பெயர் கொண்ட சோழ மன்னனால்  நிர்மாணிக்கப்பட்டது என்றும், அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆட்சியாளர்களால் திருப்பணிகள் மற்றும்  கைங்கர்யங்கள்  செய்ததாக கல்வெட்டுக்குறிப்புகள் கிடைக்கபெறுவதாக கூறப்படுகின்றன. ”ஆதானிப்பாக்கம்” என்கிற பெயர் மருவி இன்று ”ஆதம்பாக்கம்” வழங்கப்படுகின்றது. 

Exit mobile version