மணலி புதுநகர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த மணலி புதுநகர் அருகே உள்ள விச்சூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ரோகித் ரோஷன் (வயது 10) அதே பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் விச்சூரில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் ரோகித் ரோஷன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது கால் தவறி குளத்தில் விழுந்தான். அதை யாரும் கவனிக்காத நிலையில், அவருடன் விளையாடிக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் வீட்டுக்கு திரும்பி விட்டனர். ரோகித் மட்டும் வீட்டுக்கு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் செல்லியம்மன் கோவில் அருகே தேடினர்.
அப்போது கோவில் குளத்தில் ரோஹித் ரோஷன் பிணமாக மிதப்பதை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணலி புதுநகர் போலீசார், ரோகித் ரோஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் குளத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
