Home Uncategorized ஸ்டார்ட் … ஆக் ஷன்- அத்தியாயம் – 1

ஸ்டார்ட் … ஆக் ஷன்- அத்தியாயம் – 1

அத்தியாயம் – 1.

இயக்குநர் திரு.A.S.A. சாமி.

குறுகத் தரித்த குறள்.. போல.. ஐந்தடிக்கும் குறைவான உயரம்.. ஆனால்.. அதில்.. விஸ்வருபம் எடுத்த.. கலை வித்தகர் தான் திரு.A.S.A. சாமி அவர்கள்..

கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில்.. மக்கள் திலகம் நாயகனாக முதன் முதலாக நடித்த இராஜகுமாரி…,

அரசியலும் … சமூக நீதியும் …. நாத்திகமும்….. பேசி அணு குண்டாய்.. திரையில் வெடித்த அறிஞர்.. அண்ணாவின் வேலைக்காரி…

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த தங்கப் பதுமை..
போன்ற சரித்திர முக்கியத்துவம் பெற்ற திரைக் காவியங்களை இயக்கிய திரு.A.S.A.சாமி அவர்கள் தான் இந்த அத்தியாயத்தின் நாயகன்..

1915 இல் அன்றைக்கு சிலோன் என்று அழைக்கப் இலங்கையில்.. கொழும்பு நகரில் பிறந்தவர்… திறம்பட படித்து யூனிவர்சிட்டி ஆப் லண்டன் தரும் BA Honours பட்டம் பெற்றவர்

மேற்கத்திய மற்றும் இந்திய இலக்கியத்தில்.. புலமை பெற்றவர்.
எழுத்தாற்றல் மிக்கவர்..

பில்ஹனியம் என்ற சமஸ்கிருத காப்பியத்தை தழுவி … ‘பில்ஹணன்’ என்ற நாடகத்தை எழுதி.. கல்லூரி ஆண்டு விழாவில் அரங்கேற்றினார்.. அன்று.. கிடைத்த கைத்தட்டல்கள்.. அவரது.. கலைப் பயணத்துக்கு உரம் போட்டன..

1930களில் குடும்பம் தமிழகத்துக்கு பெயர்ந்தது…தமிழக வாசி ஆனார்..

திருச்சி வானொலி நிலையத்துக்கு  ‘பில்ஹணன்’ நாடகத்தை அனுப்பி வைத்தார்..

அந்த நாடகம் ஏற்றுக் கொள்ளப்பட்டது… அன்றைய   சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்கள் நடிக்க ஒலிபரப்பான அந்த நாடகம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது..

நாடகத்தை கேட்ட.. நாடகத் தந்தை..

T.K. சண்முகம் அவர்கள் தன்னுடைய பாலசண்முகானந்தா நாடகக் குழு மூலமாக அதை மேடைகளில் நடத்தினார்…

பின்னாளில்.. 1948 ல்.. ‘பில்ஹணன்’ ASA சாமியின் திரைக்கதை வசனத்தில் ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு அவர்களால் … T.K. சண்முகம் நடிப்பில் திரைப் படமாகவும் வெற்றி நடை போட்டது..

ஆங்கில இலக்கியங்களில் திரு.ASA சாமிக்கு இருந்த புலமையை வைத்து… பல ஆங்கில நாவல்களையும்.. படங்களையும்.. தழுவி அவர்.. தன் தமிழ்ப் படைப்புகளை புடம் போட முடிந்தது..

ஆசிரியர் பணியில் கிடைத்த நேரந் தவறாமை.. கால அட்டவணைப்படி செயல்படுவது.. சொல்ல வேண்டியதை.. தெளிவாக.. மனதை ஈர்க்கும் வண்ணம் சொல்வது.. போன்ற குணாதிசயங்கள் அவரை ரமான எழுத்தாளராக உயர வைத்தது..

பல படங்களுக்கு திரைக்கதை வசனகர்த்தாவாகப் பணி புரிந்தார்..

ஜூபிடர் பிக்சர்ஸ் கோயமுத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரித்த பெரும்பாலான படங்களில் பணியாற்றினார்.

வால்மீகி.. மற்றும்.. ஸ்ரீவள்ளி.. அவைகளில் சில குறிப்பிட்ட படங்கள்..

மக்கள் திலகம்.. MGR அவர்கள்.. சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த காலம் அது…

எம்.ஜி.ஆர். அவர்கள் ஜூபிடர் பிக்சர்ஸில் மாதச் சம்பளத்தில் நடித்து வந்தார்.. ஸ்ரீ வள்ளியில்.. எம்.ஜி.ஆர். அவர்களும் மாலதியும்.. இணைந்து ஆடிய.. சிவன் – பார்வதி.. நடனம்.. அன்றைய கால Smash hit..

அந்த கால கட்டத்தில் உருவானதுதான்.. MGR – ASA சாமி நட்பு..

திரு எம் ஜி ஆர் அவர்கள் ASA சாமி அவர்களை அண்ணே என்று தான் அழைப்பார்..

ASA சாமி எம்ஜிஆர் அவர்களை ராமச்சந்திரா என்று தான் கூப்பிடுவார்!. அந்த பாங்கு எம்.ஜி.ஆர்.. அவர்கள் முதல்வர் ஆன காலத்திலும் நீடித்தது… அப்படி அவரை கூப்பிடும் உரிமையை சாமிக்கு எம்ஜிஆர் அவர்கள் கொடுத்திருந்தார்!

அதற்கு இன்னொரு பெரிய காரணமும் இருந்தது..

அது..1947 …

ASA சாமி அவர்கள் ஒரு ராஜா ராணி கதையை எழுதி ஜுபிடர் பிக்சர்ஸ் சோமுவிடம் தந்தார்..! கதை சோமு அவர்களுக்குப் பிடித்துப் போக… அதை திரைப் படமாக தயாரிக்க முடிவெடுத்தார்.!

அதனை ASA சாமி அவர்களையே இயக்கச் சொன்னார்..

தொழில் நுட்பக் கலைஞர்களின்.. தலைமை பொறுப்பு.. Captain of the Ship.. என்ற மகுடம்.. ASA சாமிக்கு கிட்டியது..
அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய பி.யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர். ராஜகுமாரி இவர்களை வைத்து அந்தப் படத்தை தயாரிக்க சோமு அவர்கள் விரும்பினார்..

தான் இயக்கும் முதல் படம்.. பெரிய நடிகர் நடிகைகளை வைத்து டென்ஷனை ஏற்றிக் கொள்ளக் கூடாது.. சுதந்திரமாக செயல்பட வேண்டும் … என்று திரு எம் ஜி ஆர் அவர்களை ஹீரோவாக ASA. சாமி தேர்வு செய்தார்.. அந்த தேர்வு சரித்திர தேர்வாக … அமைந்தது..!

திரு.எம்.ஜி.ஆர். – மாலதி நடிப்பில்..

ராஜகுமாரி – 1947 இல் வெளி வந்து மாபெரும் வரவேற்பு பெற்றது..

திரு எம் ஜி ஆர் அவர்களுக்கு நாயகன் அந்தஸ்து கிடைத்தது …

அங்கிருந்து ஆரம்பித்த திரு எம் ஜி ஆர் அவர்களின் பயணம் அவரை பல்லாண்டு காலம் உச்சத்தில் … ஒரு நடிகராக … ஒரு அரசியல் தலைவராக … ஒரு முதல்வராக … வாழ வைத்தது!.. இன்றும் திரு எம்.ஜி.ஆர்.. அவர்கள்.. மக்கள் மனதில் வாழும் ஒரு இடத்தைப் பிடிக்க ராஜகுமாரி படம் மிகப் பெரிய பாதை போட்டது!

அமானுஷ்ய.. திகிலூட்டும்.. காட்சிகள்.. அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள்.. தந்திரக் காட்சிகள்.. அன்றைய Matte works.. Miniature works.. இன்றைய
Graphicsக்கு போட்டிப் போடும் வண்ணம்.. எடுக்கப்பட்டது..

ராஜகுமாரி திரைப்படத்தில் இன்னொரு கலை அற்புதத்தை ASA சாமி அவர்கள் செய்தார்..

1946 இல் அபிமன்யு  படத்திற்கு ASA சாமி அவர்கள் திரைக்கதை வசனம்  எழுதிய போது  அவரிடம் இணை எழுத்தாளராக பணி புரிந்தவர் கலைஞர் கருணாநிதி …! அந்த துடிப்பான இளைஞனின் கற்பனா சக்தி.. தமிழ்.. வளமை.. புலமை.. ASA சாமியை பிரமிக்க வைத்தது..

அதன் விளைவு…

தான் இயக்கிய முதல் படத்திற்கு கலைஞர் கருணாநிதி அவர்களையே திரைக்கதை வசனம் எழுத வைத்தார்… கலைஞர் கருணாநிதி அவர்களின் திரைக்கதை வசனம் அந்தப் படத்துக்கு மேலும் புகழ் சேர்த்தது..

ASA சாமி அவர்களின்.. வாழ்க்கையில் மற்றுமொரு வரலாற்று பெருமை பெற்ற படம்…

“வேலைக்காரி”…அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய மேடை நாடகம்..

திரு. K.R.ராமசாமி அவர்கள்.. நடிக்க.. தமிழக மேடைகளில்.. அமோக வரவேற்போடு நடத்தப் பட்டு வந்தது.. அதை திரைப் படமாக உருவாக்க.. முடிவு செய்யப் பட்டது..

கலைஞர்கள்.. நடிகர்கள் எல்லாரையும் அறிஞர் அண்ணா அவர்களே.. தேர்வு செய்தார்…..

ASA சாமியோடு சில.. சந்திப்புகள்.. அதன் பிறகு அறிஞர்.. அண்ணா ASA சாமியை வேலைக்காரி படத்தின் இயக்குனராக தேர்வு செய்தார்..!
படம் மாபெரும் வெற்றி..

பணவெறி ஜாதி வெறி பிடித்த பணக்காரன் ஒருவனுக்கு பாடம்.. புகட்ட.. ஒரு பணக்கார இளைஞனாக.. போலி வேடம் போட்டு.. பணக்காரனின் மகளையே தன் மனைவியாக்கி அவளை.. வேலைக்காரி போல நடத்தும் நாயகனின் கதை..

ஒருவனை அழிக்க.. நான்கு யுக்திகள்.. அடுத்து கெடுக்கும் படலம்.. பணம் பாழாக்கும் படலம்.. மானம் பறிக்கும் படலம்.. கண்குத்தும் படலம்..

இந்த வகைகளில் செயல்படும் நாயகன்.. பணக்காரனின் திமிரை அழித்து.. நீதியை நிலைநாட்டும் படம்..
படத்தில் இடம் பெற்ற நாத்திக வாதங்கள்…இந்து மதத்திற்கு எதிரான சில காட்சிகள்.. படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற அளவிற்கு பிரச்னைகளை உருவாக்கியது!.. அதையெல்லாம் மீறி படம்..மாபெரும் வெற்றி கண்டது..

திரைப்படங்களில் அரசியல் சித்தாந்தங் களை சொல்ல முடியும் என்ற புரட்சி சிந்தனைக்கு நீருற்றிய முதல் படம்.. வேலைக்காரி..!
நாத்திக கருத்துகள்.. திராவிட கருத்துகள்.. சொல்லப்பட்ட முதல்படம்..!

‘கத்தியை தீட்டாதே..உன் புத்தியை தீட்டு’…

‘ சட்டம் ஒரு இருட்டறை.. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு ஆனால் அந்த விளக்கு ஏழைக்கு எட்டாத விளக்கு..’..

போன்ற காலத்தால் மறக்க முடியாத வசனங்கள் இடம்பெற்ற படம்.

‘ ஒன்றே குலம்.. ஒருவனே தேவன்’ என்பது அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமாக மாறியது..

முழுக்க.. முழுக்க.. வசனங்களுக்கு முக்கியத்துவம் தந்த படம்.. என்பதால்..Midshots களிலும்.. கதா பாத்திரங்கள் கேமராவைப் பார்த்தும் பேசும்.. யுக்திகளிலும்.. ASA சாமி அவர்கள் இயக்கிய துணிச்சலான சாதனைப் படம். வேலைக்காரி.

ASA சாமி அவர்கள்.. 1971 வரை.. 21 திரைப் படங்களை இயக்கினார். அதில்.. முத்தாய்ப்பாக.. தங்கப் பதுமை … அரசிளங் குமரி… ஆனந்த ஜோதி.. கற்புக்கரசி படங்களைச் சொல்லலாம்..

1956 இல் சிங்கள மொழியில் அவர் இயக்கிய படம் ‘ Dingrimi menike..’

1967 இல் அவர் இயக்கிய ஹிந்தி படம். ‘மாய சுந்தரி…’

1971 இல் அவர் இயக்கிய ‘திருமகள்’

முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் அவருடைய கலை சாதனைகளை பாராட்டி  அரசு திரைப்படக் கல்லூரியில் ஆசிரியர் பதவி கொடுத்தார்.. Direction department head ஆக அவர் பணி புரிந்த கால கட்டத்தில் அவரிடம் பயின்ற சில மாணவர்கள் …  திரு.ஆபாவாணன்.. திரு அரவிந்தராஜ் … திரு. ஆர்.வி. உதயகுமார் மற்றும் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நான்… எங்களுக்கு குருவாக ASA சாமி அவர்கள் அமைந்தது எங்களுடைய பெரும் பாக்கியம்..!

அவர் தன்னுடைய திரைப்பட அனுபவங்களை வைத்தே எங்களுக்கு பாடங்கள் எடுப்பார்… அழகான ஆங்கில உச்சரிப்பு… தெளிவான டெக்னிக்கல் அறிவு.. திரைக்கதை அறிவு.. இவைகளோடு அவர் எடுத்த பாடங்கள்

தமிழ்த் திரைப் படங்களை பற்றிய எங்கள் பார்வைகளை பக்குவப் படுத்தியது.. எந்தெந்த வகைகளில் அந்த காலத்தில் இயக்குனர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை சொல்வார்…! ஆனந்த ஜோதி படத்தில் ஒரு பாடல்…! “நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா !”

மிகப் பிரபலமான பாடல்.. இன்றும்  கேட்டால்  மனதை அள்ளும்..!

திருமதி தேவிகா அவர்கள் ஒரு பெரிய சிலைக்கு முன்  பாடுவார்கள்!..அந்தப் பாட்டில் எந்த இடத்தில்.. சிலைக்கு முன் நாயகி.. நிற்பார்.. அமர்வார்… என்ற Shots composition ஐ எல்லாம்.. இயக்குனராக ASA சாமி அவர்கள் விளக்கி சொன்ன பிறகு தான்.. எத்தனை அடியில்.. சிலை.. இருக்க வேண்டும்.. பீடம்.. இருக்க வேண்டும் என்று ஆர்ட் டைரக்டர் அரங்கம் அமைத்திருக்கிறார்.. கறுப்பு வெள்ளையில் .. கேமிரா கோணங்களும்.. ஒளிப்பதிவும்.. இன்றும்.. ஒரு.. Text book ஆக.. அந்தப் பாடல்.. இருக்கிறது..
ஒரு இயக்குனர் முழு கிளாரிட்டியோடு செயல் பட வேண்டிய  காலம் அது! கருப்பு வெள்ளை படம்! அதில் காட்சிகளும்.. கதாபாத்திரங்களும். தெளிவாக.. செப்பரேட் செய்து காட்டப் பட வேண்டும்!..

ஒரு காட்சி எந்த இடத்தில் நடக்கிறது? கதாபாத்திரங்கள் எங்கு நிற்பார்கள்..? நடப்பார்கள்..? எந்த இடத்தில் கதாபாத்திரங்களுக்கு குளோசப் எடுக்கப்படும் என்பதையெல்லாம் இயக்குனர் தெளிவாக சொன்ன பிறகுதான்.. அரங்கம் அமைக்கப் படும்.. வர்ணங்கள் பூசப்படும் …

எதற்காக Low angle? Top angle? Trolley shot என்பதை தெளிவாக கற்பித்தவர் அவர்.. வெறும்.. அழகுக்காக …monatany ஐ Break செய்வதற்காக மட்டுமே.. கேமரா.. ஆங்கிள் என இருக்கக் கூடாது.!. அதில்.. aesthetic value இருக்க வேண்டும்.. என்று.. போதித்தவர் அவர்…!

அவர் கடைசி காலத்தில் நோய் வாய்ப் பட்டு.. போராடிய போது.. பெறும் பண உதவி செய்து.. தன் நன்றியை காணிக்கை ஆக்கியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி அவர்கள்..

அருள் சூசை அந்தோணி சாமி என்கிற ASA சாமியின் சாதனைகள்.. என்றும்.. வாழும்..!!!

– இயக்குநர் நித்தியானந்தம்.

Exit mobile version