ஸ்டார்ட் .. ஆக்ஷன்
அத்தியாயம். 21.
இயக்குனர் .ப.நீலகண்டன்..
35 வருடங்கள் தமிழ்த் திரைப் பட உலகில்
எழுத்தாளராக … இயக்குனராக வலம் வந்தவர்..
1957 முதல் 1976 வரை.. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 17 படங்களை இயக்கியவர்!
ஒரு இயக்குனர் உருவாவதற்கு அடிப்படையாக அவருக்கு கதை
அறிவோ.. நடிப்பாற்றலோ … இசை ஞானமோ ஆதார சுருதியாக இருக்கும்!.. அந்த பலம் … அவரை இயக்குனராக உருவாக்கும்!
அந்த வகையில் சிறந்த கதை அறிவும் எழுத்தாற்றலும் ப.நீலகண்டன் அவர்களை இயக்குனராக உருவாக்கி இருக்கிறது!..
1916 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் திரு. பழனியாண்டி பண்டாரத்துக்கும் … அம்புஜத்துக்கும் மகனாக பிறந்தவர்! நன்கு படித்தவர்!
நாடகத் துறையில் தன் கவனத்தைச் செலுத்தி ஒரு நாடக ஆசிரியராக தன்னை வளர்த்துக் கொண்டு பல நாடகங்களை எழுதியிருக்கிறார்!..
1945 இல்..அவர் எழுதிய ‘ நாம் இருவர்’ என்ற நாடகம் பட்டி தொட்டி எங்கும் வெற்றிகரமாக மேடைகளில் வலம் வந்து கொண்டிருந்தது..!
அந்த நாடகத்தை திரு ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் நாம் இருவர் என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து.. இயக்கினார்! அந்தப் படத்தின் கதை வசனகர்த்தாவாக
தமிழ்த் திரை உலகில் தடம் பதித்தார் ப.நீலகண்டன் அவர்கள்.. படம் பெரிய வெற்றி பெற்றது.. தொடர்ந்து ..AVM நிறுவனத்தில்.. A.V.மெய்யப் பன் அவர்கள்.. இயக்கிய ‘வேதாள உலகம்’.. ‘வாழ்க்கை’ ஆகிய படங்களில் சக இயக்குனராகவும்.. வசனகர்த்தா வாகவும்.. பணியாற்றினார்!..
ப.நீலகண்டன் அவர்களின் எழுத்தாற்றலுக்கும்.. தன்னோடு இயக்கத்தில் உறுதுணையாக இருந்ததற்கும்.. பிரதிபலன் செய்யும் விதமாக.. ப.நீலகண்டன் அவர்களை இயக்குனராக உயர்த்த.. முடிவெடுத்தார்.. ஏ.வி.மெய்யப்பன் அவர்கள்!
அதன் விளைவு?
1951 இல் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த
‘ஓர் இரவு’ படத்தின் மூலம் ப.நீலகண்டன் அவர்கள் இயக்குனராக உருவானார்!
அறிஞர் அண்ணா அவர்களை ஏ.வி.எம் நிறுவனம் கதை எழுத பணித்தது!.. ரூபாய் பத்தாயிரமும் கதை வசனத்துக்கு தரப்பட்டது!..
அறிஞர் அண்ணா அவர்கள் ஏ.வி.எம் நிறுவன அலுவலகத்துக்கு வந்து ஒரு இரவு முழுக்க உட்கார்ந்து 300 பக்க அளவில் ‘ஓர் இரவு’ படத்திற்கான முழு திரைக்கதை வசனத்தையும் எழுதி கொடுத்து விட்டு சென்றார்!
அதற்குப் பிறகு ப.நீலகண்டன் அவர்களும் ஏ.வி.மெய்யப்பன் அவர்களும் அறிஞர். அண்ணாவின் திரைக்கதை வசனத்தைப் படித்து.. விவாதித்தார்கள்!.
ப.நீலகண்டன் அவர்கள் சில மாற்றங்களை செய்து படம் எடுக்கப்பட்டது!.
‘ஓர் இரவு’ என்ற தலைப்புக்கு ஏற்றபடி ஓர் இரவிலேயே முழு திரைப்பட கதை வசனத்தையும் எழுதி முடித்த சாதனையை அறிஞர் அண்ணா அவர்கள் செய்திருந்தார்! படத்தில் ஓர் இரவு நடக்கும் காட்சிகள் தான் முழு படமாக இருந்தது!
இன்றைக்கு ஒரே இரவில் நடக்கும் கதை என்று மாடர்ன் டிரெண்டாக சொல்லிக் கொண்டிருக்கும் பல படங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! இவற்றுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது ஓர் இரவு படம் என்று சொல்லலாம்!.
‘ஓர் இரவு’ திரைப் படம் 1951இல் வெளியானது!..பெரிய வெற்றியை பெறவில்லை!.
ஆனால் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றது!
ப.நீலகண்டன் அவர்களுக்கு … அவர் இயக்கிய முதல் படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற பெயர் கிடைத்தது!
ஆனாலும் அறிஞர் அண்ணா அவர்களின் திரைக்கதை வசனத்தில் அவர் செய்த சில மாற்றங்கள் தான் படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது!.
ப.நீலகண்டன் அவர்களுக்கு அடுத்த படம் கிடைக்க தாமதமானது!..
சில கால வனவாசம்!
கலைஞர்களுக்கு அதுதான் காலம் நடத்தும் பரிட்சை என்பார்கள்!
தோல்வியில் தொலைந்து போகாமல்… எழுந்து.. நின்று தன்னை திரும்ப நிலை.. நிறுத்துவதில்தான்.. ஒரு.. உண்மைக் கலைஞன் உருவாகிறான்!
ப.நீலகண்டன்.. அதை சாதித்தார்.!
அவரே.. ஒரு கதையை உருவாக்கினார்…! முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த திரைக்கதை வசனத்தை எழுதினார்! ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்று பெயரிட்டார்..!
பி.ஆர்.பந்துலு அவர்கள் அதை திரைப் படமாக தயாரிக்க முன் வந்தார்!
பத்மினி பிக்சர்ஸ் நிறுவனம் உருவானது!..
நடிகர் திலகம் மெயின் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த கால கட்டத்திலும் … நகைச்சுவை நடிகர்
டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் அவரோடு சேர்ந்து நடித்தார்!..
படத்தை எப்படியும் வெற்றி அடைய வைக்க வேண்டும்.. என்ற வெறியோடு ப.நீலகண்டன்.. அவர்கள்.. இயக்கினார்..
படம் முடிவடைந்த தருவாயில் படத்துக்கு ஒரு பிரச்சனை வந்தது!
பட வெளியீடே கேள்விக் குறியானது..
அது என்ன?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்
