ஸ்டார்ட் .. ஆக்ஷன்
அத்தியாயம். 22.
இயக்குனர் ப.நீலகண்டன்.
‘கல்யாணம பண்ணியும் பிரமச்சாரி’ திரைப்படம்.. முடிந்து.. ரிலீஸ்.. ஆக வேண்டிய நேரம்..
தெலுங்கில் பிரபலமாக விளங்கிய நாடக நடிகர் வேதம் வெங்கட்டராய சாஸ்திரி அவர்கள் … தனது மேடை நாடகத்தையே ‘கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி’என்ற படமாக எடுத்திருக்கிறார்கள்..என குற்றம் சாட்டினார்! வெளியீட்டில் பிரச்னை வரக் கூடாது என்பதற்காக.. தயாரிப்பாளர் பி. ஆர்.பந்துலு அவர்கள்.. சாஸ்திரி அவர்களுக்கு பணம் கொடுத்து.. சமரசமாகப் போக முயன்றார்! அதற்கு ஒத்துக் கொண்ட சாஸ்திரி அவர்கள்.. டைட்டிலில்.. தன் பெயர் இடம் பெற வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்! அதற்கு ப.நீலகண்டன் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை!.சாஸ்திரி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்! ஆனால் தீர்ப்பு ப.நீலகண்டன் அவர்களுக்கு சாதகமாகவே வந்தது! பெரிய கண்டத்தைத் தாண்டி ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படம் வெளியானது! பெரிய வெற்றியை பெற்றது! நகைச்சுவை படங்களுக்கு ஒரு இலக்கணம் வகுத்தது..!
ப.நீலகண்டன் அவர்களுக்கும் வெற்றிப் பட இயக்குனர் என்ற அங்கீகாரம் கிடைத்தது! அதைத் தொடர்ந்து பல படங்கள் அவருக்கு அணி வகுத்தன!
1955 ல் … ‘முதல் தேதி’ படத்தை இயக்கினார்..!
பி.ஆர்.பந்துலு அவர்கள் ‘முதல் தேதி’ படத்தை தமிழிலும் … கன்னடத்திலும் தயாரித்தார்!
1946 இல் வெளி வந்த ஆங்கில படம் ‘இட்ஸ் எ ஒன்டர்புல் லைஃப்’ (It’s wonderful life)..அதை.. ஹிந்தியிலும் எடுத்திருந்தார்கள்! அந்தப் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றபடி மாற்றி தாதாமிராசி அவர்கள் திரைக்கதை வசனம் எழுதி இருந்தார்!
கன்னடத்தில் பி.ஆர்.பந்துலு அவர்களே கதாநாயகனாக நடிக்க …. தமிழில் கதாநாயகனாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்தார்.. அவருடன் என் எஸ் கிருஷ்ணன் அவர்களும் டி.ஏ.மதுரம் அவர்களும் நடித்தார்கள்! அருமையான கதைக் களம்!..
ஒரு வங்கி ஊழியன்! அவனது வங்கி திவால் ஆகி விடுவதால் குடும்பத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்! எமலோகம் செல்கிறான்! அங்கே எமதர்மர் அவனை திட்டுகிறார்!.
‘தற்கொலை செய்வது கோழைத்தனம்! அவன் செயலால் … அவனது குடும்பம் படும் பாட்டை அவன் பார்க்கட்டும்’ என்று திரும்ப நாயகனை பூலோகத்துக்கு அனுப்பி வைக்கிறார்!.. பூலோகம் திரும்பும் நாயகன் அவனது குடும்பம் அவன் இறப்புக்கு பின்பு படும் கொடுமைகளை காண்கிறான்! மகன் குற்றவாளியாக சிறைச்சாலையில் அடைக்கப் படுகிறான்! மகள் ஒரு அயோக்கியனால் கற்பழிக்கப்படுகிறாள்! கற்பழித்தவனை நாயகனின் மனைவியே கொன்று விட்டு அவளும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்!..
இவைகளை எல்லாம் பார்த்து அலறுகிறான் நாயகன்!.. நல்லவேளையாக இவை அனைத்துமே அவனுடைய கனவு!
தூக்கத்திலிருந்து நினைவுலகத்துக்கு வரும் நாயகன் ‘இனி தற்கொலை செய்து கொள்ள கூடாது! குடும்பத்தை எப்படியாவது காக்க போராட வேண்டும்!. தற்கொலை என்கிற கோழைத் தனமான எண்ணமே தவறு’ என்ற முடிவுக்கு வருகிறான்!
இந்த அற்புதமான கதை களத்தை ஆழம் மாறாமல் நன்றாக இயக்கியிருந்தார்.. ப.நீலகண்டன் அவர்கள்!..
பல ஜன ரஞ்சகமான நல்ல பாடல்கள் இடம் பெற்றிருந்தன!
சிவாஜி கணேசன் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட.. நடிப்பை.. under play யுக்தியைப் பயன்படுத்தியிருந்தார்!
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் கருத்தாழமிக்க.. வசனங்களும்.. பாடல்களும்.. சிந்தனை விருந்தை படைத்தன!
படம் நல்ல பெயர் பெற்றது.!
ப.நீலகண்டன் அவர்கள் தொடர்ந்து படங்களை இயக்கினார்!
அதில் குறிப்பிடும் படியாக அவருக்கு 1957 இல் அமைந்த படம் ‘அம்பிகாபதி’!..
1937 இல் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்து வசூலில் வரலாறு படைத்திருந்த ‘அம்பிகாபதி’ படத்தை திரும்பவும் சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க.. ரீமேக். செய்ய முடிவானது…!
அம்பிகாபதியின் அப்பாவாக வரும் கம்பர் வேஷத்தில் எம்.கே தியாகராஜ பாகவதர் அவர்களை நடிக்க வைக்க முயற்சித்தார்கள்!..ஆனால் எம்.கே தியாகராஜ பாகவதர் அவர்கள் கதாநாயகன் வேடத்தை தவிர வேறு எந்த வேடத்திலும் நடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்து விட்டார்! அப்போது அவர் வறுமையில் இருந்த காலகட்டம்!.. இருந்தாலும்.. அவர்.. தொழிலில்.. தன் நிலை இறங்கி வர மறுத்து விட்டார்!..
புலி பசித்தாலும்.. புல்லைத் தின்னாது.. என்பதை செயலாக்கி காட்டினார் ..!
திரு சிவாஜிகணேசன் அவர்களுக்கு ஜோடியாக பி பானுமதி அவர்கள் நடித்தார்..!
ப.நீலகண்டன் அவர்கள் இயக்கினார்!
பாடல்களும் பிரமாதமாக அமைந்தன!. பகுதி கலரிலும் எடுக்கப்பட்டது!.. ஆனால் படம் பெரிய வெற்றி பெறவில்லை..!
எம்.கே தியாகராஜ பாகவதர் அவர்களின் அம்பிகாபதி படத்தோடு இந்தப் படத்தை ரசிகர்கள் ஒப்பிட்டதால் படத்துக்கு போதிய வரவேற்பு இல்லை!..
இந்த நேரத்தில் ப.நீலகண்டன் அவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு இனிய திருப்பு முனை நிகழ்ந்தது! மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது!
தன் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறோம் என்ற சந்தோஷத்தோடு அவர் முதல் நாள் படப்பிடிப்பை ஆரம்பித்தார்!..
ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது!
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்
