Home கிளாசிக் ஸ்டார்ட்.. ஆக்ஷன். அத்தியாயம். 32- இயக்குனர் தாதா மிராஸி – சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட்.. ஆக்ஷன். அத்தியாயம். 32- இயக்குனர் தாதா மிராஸி – சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் ஆக்ஷன்

அத்தியாயம். 32.

இயக்குனர். தாதா மிராஸி.

வருடம் 1964 …

‘To Chase A Crooked Shadow ‘  என்ற ஆங்கிலப் படத்தை தழுவி வங்காள  மொழியில்  ‘சேஷா அங்கா’ என்ற திரைப் படம் வெளி வந்தது!

அந்த படக் கதையில் சில மாற்றங்கள் செய்து தாதா மிராஸி  அவர்கள் ‘ புதிய பறவை’ என்ற பெயரில் திரைப் படமாக இயக்கினார்!..

வங்கப் படத்தில் இருந்த நீதிமன்ற காட்சிகளை எல்லாம் மாற்றி … கடைசி கட்டம்.. முழுக்க ஒரு பங்களாவுக்குள்ளேயே நடக்கும்  வண்ணம்  படமெடுத்தார்..

 மனைவி இறந்து போக..கதாநாயகன் வேறு ஊருக்கு வந்து அங்கு கதாநாயகியை சந்தித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ள தயாராகும் சூழலில் …. இறந்ததாக கருதப்பட்ட முதல் மனைவி உயிரோடு வர …. அதை வைத்து நடக்கும் பிரச்னைகள் தான் படத்தின் பிரதான களம்!..

உச்சகட்ட … தருணத்தில் கதாநாயகன்தான் முதல் மனைவியை கொன்றிருக்கிறான் என்கின்ற திடுக்கிடும் திருப்பம்  வெளி வரும் ! 

கதாநாயகியும்.. அவளைச் சேர்ந்தவர்களும் அந்த உண்மையை கண்டு பிடிக்க  மாறு வேடத்தில் வந்த காவல்துறை அதிகாரிகள் என்ற இன்னொரு திருப்பமும் வெளி வரும்!..

முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக் களத்தில் கதாநாயகனையே ஒரு கொலைகாரனாக சித்தரித்து … நல்ல இமேஜோடு  உச்சத்தில் இருந்த சிவாஜி கணேசன் அவர்களையும் 

 நடிக்க வைத்து … துணிச்சலோடு படத்தை இயக்கியிருந்தார் … தாதா மிராஸி அவர்கள்!

கலரில் எடுக்கப்பட்ட படத்தில் அமைக்கப்பட்ட ஒளி அமைப்புகள் படத்தின் Aesthetic value வை  கூட்டி..அழகான திகில் கவிதையாக… ஒளிப்பதிவாளர் K.S. பிரசாத் அவர்களுக்குப் பெயர் வாங்கித் தந்தன!. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்கள் … பிரமிக்க வைத்தன!

‘பார்த்த ஞாபகம் இல்லையோ’… ‘எங்கே நிம்மதி’ … போன்ற பாடல்கள்.. ஒளி ஓவியங்கள்!..

பின்னணி இசை….அரங்க அமைப்புகள் என்று அனைத்திலும் மேற்கத்திய படங்களுக்கு இணையான படமாக ‘புதிய பறவை’  திரைப்படம்.. திகழ்ந்தது!

கதாநாயகன் வேடம் முழுக்க எதிர் மறையாக இருந்தும் சிவாஜி கணேசன் அவர்கள் தனது ‘சிவாஜி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலமே படத்தை தயாரித்து நடித்தார்! அவருடைய  நடிப்புக்கு நாயகன் கதா பாத்திரம் பெரிய தீனி போடும் என்பது அவருடைய நம்பிக்கை!

அது பொய்யாகவில்லை!

அவரது … குரல் …நடை உடை பாவனை என்று அனைத்திலும் நடிப்புக்கு இலக்கணம் வகுத்திருந்தார்!

தாதா மிராஸி அவர்களின் நிரந்தர பார்முலாவான ‘குற்றம் செய்த நல்லவனின் தவிப்பு’.. இந்தப் படத்திலும் ஆழமாக வெளிப்பட்டது! ‘புதிய பறவை’ …ஒரு நவீன திரில்லர் திரைப் படத்திற்கான Text book ‘ ஆக… விளங்கி வருகிறது!

இதைத்தொடர்ந்து அவர் இயக்கிய பூவும்.. பொட்டும்..’ படத்திலும் 

‘தான் ஏமாற்றியது தெரிந்ததும் தற்கொலைக்கு முயன்ற காதலியை .. குற்ற உணர்ச்சியோடு காதலன் அவளை … மீண்டும் நல் வழிப்படுத்த போராடும் கதை’… பிரதானமாக அமைந்தது! 

அதைப் போலவே ‘ராஜா வீட்டுப் பிள்ளை’ திரைப் படத்திலும் நாயகன் ஒருவரை விபத்துக்குள்ளாக்க … அதில் அவர் மன நோயாளியாகி விட..  அவருடைய வீட்டுக்கே போய் ஹீரோ.. செக்யூரிட்டியாக வேலை செய்யும் கதையே பிரதான கருவாக அமைக்கப்பட்டிருந்தது!

தாதா மிராஸி அவர்கள்..இயக்கி …

 சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த ‘மூன்று தெய்வங்கள்’ என்ற திரைப் படத்திலும்.. குற்ற உணர்வில் அல்லாடும்.. நாயகன் கதைதான் மையம் கொண்டிருந்தது. சிறையில் இருந்து தப்பிய மூன்று கைதிகள் ஒரு வீட்டில் திருடச் செல்ல … வீட்டில் இருப்பவர்கள் அவர்களை விருந்தாளிகளாக நடத்த.. வேறு வழி இல்லாமல் அவர்கள் அந்த வீட்டிலேயே தங்கி அந்த குடும்பத்தார் கஷ்டங்களை எல்லாம் போக்க போராடும் கதைக் களம்! தாதா மிராஸி அவர்கள் ஒன்பது படங்களையும்.. ஒன்பது விதமாக இயக்கி இருந்தாலும்….குற்றம் செய்த நல்லவர்களுடைய உணர்வு போராட்டத்தையே கதைக் கருவாக கையாண்டிருந்தார்!வெற்றியும் பெற்றிருந்தார்!

அந்த மையக் கரு இன்றும்  பல படங்களில் ஹீரோக்களுக்கு பின் புலமாக படைக்கப் பட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்… அந்த வகையில் அந்த பார்முலாவுக்கு ஆணி வேர்..தாதா மிராஸி அவர்கள் என்று சொல்லலாம்!..

1999 இல் தாதா மிராஸி அவர்கள் நம்மை விட்டு பிரிந்தார் !..

ஆனால் அவருடைய படங்கள் அதிலும் குறிப்பாக ‘புதிய பறவை’ காலத்துக்கும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது நிதர்சனம்!

– இயக்குநர் நித்தியானந்தம்

Exit mobile version