ஸ்டார்ட் .. ஆக்ஷன்... அத்தியாயம் 53.
இயக்குனர்..பாரதிராஜா.
‘முதல் மரியாதை’….
இது படத்தின் தலைப்பு!.
இது வெறும் தலைப்பு மட்டுமல்ல!.. ஒரு திரை மேதைக்கு…ஒரு நடிப்பு திலகத்துக்கு கொடுக்கப்பட்ட மகுடம்!…
ஒரு நடிகனாக தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சென்னைக்கு வந்த பாரதிராஜா அவர்கள் நடிகனாக உருவாக முடியாமல் போய் ஒரு இயக்குனர் இமயமாக உருவாகி வாழ்ந்த கால கட்டத்தில்..ஒரு நடிப்பு இமையத்துக்கு அவர் காட்டிய மரியாதைதான் முதல் மரியாதை….!
இந்தத் திரைப்படம் பாரதிராஜா அவர்களின் சொந்த திரைப் படம்! ‘என்னுடைய சொத்தை அடகு வைத்து தான் இதை தயாரிக்க முடியும்’… என்று முடிவெடுத்து … அவர்.. தயாரிக்க.. முனைந்த நேரத்தில்...அவருடைய எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க அவருடைய ஆத்ம நண்பர் அன்னக்கிளி ஆர். செல்வராஜ் அவர்கள் ஒரு கருவை சொல்கிறார்!…
வயதான ஒருவருக்கும் இளம் பெண் ஒருத்திக்கும் நிகழக்கூடிய ஒரு அற்புதமான உணர்வு பாலம்! குரு சிஷ்ய ஸ்தானம்!..
இதைத் தாண்டி அந்த வயோதிக் கருக்காக ….தன்னையே தியாகம் செய்த ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ற ஒரு கருவை.. ஆர்..செல்வராஜ் அவர்கள் உருவாக்குகிறார்!..
ரஷ்ய எழுத்தாளர் ஒருவரிடம்…. துணையாக வந்த ஒரு பெண்மணி!…
என்ற உண்மை.. சம்பவத்தை அடித்தளமாக வைத்து..
இவர்களின் கவித்துவமான உறவை கதையாக்குகிறார்!..
தமிழ்..முலாம்..பூசுகிறார்!
சிவாஜி கணேசன் அவர்களை அந்த வயோதிக கதா பாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முதலில் யாரும் திட்டமிடவில்லை!.. ராஜேஷ் அவர்களை நடிக்க வைத்து அந்த படத்தை இயக்கலாம் என்ற ஒரு யோசனை!…
அதை புறம் தள்ளி சிவாஜி கணேசன் அவர்களுக்கு தர வேண்டிய மரியாதையாக இந்த படம் அமையட்டும்!… என் சொத்துக்களை நான் இழந்தாலும் பரவாயில்லை அவருடைய நடிப்புக்கு என் கலை வாழ்வு சமர்ப்பணம்!..’….
என்று பாரதிராஜா அவர்கள் உருவாக்கிய படம் தான் முதல் மரியாதை!..
தன்னுடைய முழு கலை தாகத்தையும் வெளிப்படுத்தி அன்னக்கிளி.ஆர். செல்வராஜ் அவர்கள் உருவாக்கிய கதை சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க… திரைப்படம் நல்ல ரூபங்களை எடுக்கிறது!..
நாயகனுக்கு காலில் செருப்பனியாத ஒரு கதாபாத்திரம்!..
முதல் நாள் முழுக்க சிவாஜிகணேசன் அவர்கள் காலில் செருப்போடு நடித்து விட்டார்! அன்றைய நாள் முழுக்க எடுக்கப்பட்டது தப்பான ஷாட்டுகள்!..
இதை கதாசிரியர். ஆர்.செல்வராஜ்.. அவர்கள்.. வெளிச்சத்துக்கு கொண்டு வர.. சிவாஜி கணேசன் அவர்கள் அடுத்த நாளிலிருந்து தான் தங்கியிருந்த லாட்ஜிலிருந்து… ஷூட்டிங் நடக்கும் இடம் வரை வெறும் காலில் வந்தார்! என்னையும் மீறி நான் செருப்போடு நடித்து விடுவேன்!.. டைரக்சன் டிபார்ட்மெண்ட் உங்களுடைய ஒர்க் பிரஷர்லே அதை கவனிக்காமல் போயிடுவீங்க! இழப்பு தயாரிப் பாளருக்கு!.. ழப்பு.. இந்த கதாபாத்திரத்துக்கு!.’
என்று படம் முடியும் வரை வரும் வெறும் காலில் நடித்தார்.. சிவாஜி கணேசன் அவர்கள்!..
அடுத்த ஒரு..சாதனை!..
ஓவர் ஆக்டிங் என்று முத்திரை குத்தப்பட்டவர் சிவாஜிகணேசன் அவர்கள்!..
‘என்னால் அண்டர் ஆக்டிங்கும் பண்ண முடியும்!’
என்பதை நிரூபித்தார்!..
அரை கிலோ விக்... ஒரு கிலோ விக்… என்று வைத்துக் கொண்டு ஹீரோக்கள் … நடித்த கால கட்டத்தில் தன்னுடைய சொந்த முடியோடு நடித்து எந்த அபரிதமான ஒப்பனைகளும் இல்லாமல்.. சாதாரண வேட்டி சட்டையில் நடித்து..காவியம் படைத்தார்..!
திருமதி. ராதா அவர்கள் நடிப்பும் அற்புதமாக இருந்தது!.. அவருக்கு டப்பிங் குரல் தரப்பட்டதால்… சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மயிரிழையில் தவற விட்டார்!..
இன்றைக்கு கையாளப் படும்…
Non.linear… டெக்னிக்!..
அதாவது நிகழ் காலத்தில் … கடந்த காலத்தை காட்டுவது ….. எதிர்கால காட்சிகளை.. காட்டுவது.. என்ற Non linear பாணிக்கு.. ஒரு தெளிவான இலக்கணமாக முதல் மரியாதை படம் அமைந்தது!
படம் மாபெரும் வெற்றி!.. இதைத் தொடர்ந்து அவர் உருவாக்கிய பல படங்களில் சர்ச்சைக்குரிய ஒரு படமாக அமைந்தது ஒரு படம்!..
அது என்ன படம்?
(தொடரும்)
