ஸ்டார்ட் ஆக் ஷன்.
அத்தியாயம்.7.
இயக்குனர். எம்.ஜி.ஆர்.
மக்கள் திலகம்.. புரட்சி நடிகர்… புரட்சித் தலைவர்.. தமிழக முதல்வர்.. பாரத ரத்னா.. என.. பலப் பல புகழாரம் சூட்டப் பட்ட எம்.ஜி. ஆர்.. என்கிற
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களைப் பற்றி… எழுத முனைவது…
கடல் நீரை ஒரு குடுவையில் அடைக்கும் கதைதான்!
இருந்தாலும் அவர்.. திரைப் படக் கலைக்கு ஒரு நடிகராக.. தயாரிப்பாளராக.. ஆற்றிய கலைச் சேவைகளோடு ஒரு திரைப் பட இயக்குனராக அவர் …இயக்கிய … முத்தான முக் காவியப் படங்களைப் பற்றி எழுதுவது இந்த கட்டுரை தொடரின் முக்கிய கடமை..!
ஒரு அரசியல்வாதியாக.. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக… தமிழக முதல்வராக.. அவர்.. வாழ்வின்.. முக்கிய தருணங்களில் அவர் இயக்கிய
நாடோடி மன்னன்..!(1958)
உலகம் சுற்றும் வாலிபன்.!(1973)
மதுரையை மீட்ட… சுந்தர பாண்டியன்..!(1978)
ஆகியவைதான்.. அந்த முக் காப்பிய தமிழ்த் திரைப் படங்கள்..!
இலங்கையில் …1917 ல்.. பிறந்து..குழந்தை பிராயத்திலேயே தந்தையை இழந்து …. விதவைத் தாயின் அன்பிலும் .. பாசத்திலும் … உழைப்பிலும் … மூத்த சகோதரனின் அரவணைப்பிலும் வளர்ந்து …. தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து தமிழ் கற்று…. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிறு பிள்ளையாக நடிப்பை துவக்கி …
திரைப் படங்களில்..உப நடிகனாக …
சக நடிகனாக…கதாநாயகனாக..வெற்றிப் பட நாயகனாக … வசூல்.. சக்ரவர்த்தியாக அவர் தன்னை வளர்த்துக் கொண்ட சரித்திர நிகழ்வுகள்… முப்பது வருடங்களுக்கும்… மேலாக.. அவர் நடத்திய கலைப் படையெடுப்புகளின்.. வெற்றி அங்கீகாரங்கள்!..
தமிழ் திரைப் பட நடிகராக உயர்ந்த அந்தஸ்தை பெற்ற அவர்.. தன்னை தயாரிப்பாளராகவும் உருவாக்கிக் கொண்டு சகோதர் எம்.ஜி. சக்ரபாணி அவர்களோடு சேர்ந்து … எம்ஜிஆர் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி அவர்.. தயாரிக்க முனைந்த படம்தான் நாடோடி மன்னன்..!
இந்தப் படத்தை தயாரிக்க அவருக்கு உந்துதலாக இருந்த நிகழ்வுகள்.. எவை?
ஒரு Butterfly Event.. நிகழ்வை நாம்.. இதில்.. காணலாம்.
1938 ம் வருடம்..
திரு. எம்.ஜி. அவர்கள்.. ஒரு நடிகராக. வளர்ந்து வந்த ஆரம்ப.. கால கட்டம்.!
‘மாயா மச்சிந்திரா’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் சிறு வேடத்தில்..நடிப்பதற்காக…
திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கத்தா சென்றிருந்த வேளை..!
அங்கே Frank Lloyd இயக்கியிருந்த ‘If I Were A King ’ என்ற ஆங்கிலப் படத்தை காண நேர்ந்தது!.. அந்தப் படத்தில் வந்த புரட்சிகரமான காட்சிகளும் … சொல்லப்பட்ட அரசியல் தத்துவங்களும் திரு எம் ஜி ஆர் அவர்களை பெரிதும் கவர்ந்தன!..
அதே மாதிரி திரைப் படத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை 1939 லேயே அவருக்கு வந்தது!..
அவர் திரைப்பட உலகில் வெற்றி நாயகனாக உயர்ந்த தருணம்… வெளி வந்த ‘மர்ம யோகி’.. திரைப் படமும்.. ‘மந்திரிகுமாரி’ திரைப் படமும்.. திரு. எம்.ஜி.ஆர்.. அவர்களை இந்தியாவின் Errol Floyn என்றும்..
Douglas Fairbanks என்றும்.. புகழ் பெற வைத்தன..!
அந்தப் படங்களில் அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரங்களும்.. ஏழைகளுக்காக உயிரை துச்சமாக எண்ணிப் போராடும்… Robin Hood ஆக.. அவரது.. பிம்பத்தை உயர்த்தியிருந்தன..
1953 ல் திரு.எம்.ஜி.ஆர்.. அவரது துணைவியார். திருமதி.வி.என். ஜானகி.. மற்றும்.. கலைஞர். மு.கருணாநிதி ஆகியோர் இணைந்து மேகலா பிக்சர்ஸ்.. என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்கள்..
ஜூபிடர் பிக்சர்ஸோடு இணைந்து ‘ நாம்’
‘என்கின்ற படத்தை தயாரித்தார்கள்..
அந்த தயாரிப்பு அனுபவம் தந்த படிப்பினையில்..
திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் ..
‘எம்ஜியார் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார்..
திரு.எம்.ஜி.ஆர் அவர்களோடு … திரு.எம்.ஜி.சக்ரபாணி அவர்களும் … திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களும்.. இணைத் தயாரிப்பாளர்களாக இணைந்தார்கள்..! கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள் கதை திரைக்கதை வசனம் எழுத..
‘விடிவெள்ளி’ என்கின்ற படத்தை தயாரிக்க திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் முடிவு செய்தார்!..
அந்த நேரத்தில் … 1953 ம் வருடம் நடை பெற்ற கல்லக்குடி இரயில் மறிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் சிறையில் அடைக்கப்பட … விடிவெள்ளி திரைப்படமும் சிறை வைக்கப்பட்டு.. கைவிடப் பட்டது!..
ஆனால்.. திரைப்படங்கள் தயாரிக்கும் எண்ணம்… திரு. எம்.ஜி.ஆர் அவர்களை விட்டுப் போகவில்லை!
அதற்குப் பிறகு திரு எம் ஜி ஆர் அவர்கள் எம்ஜிஆர் நாடக மன்றத்தை துவக்கி பட்டி தொட்டி எங்கும் நாடகங்கள் நடத்தினார்..!
தயாரிப்பாளராக வேண்டும் என்ற தன்.. எண்ணத்துக்கு திரும்ப உயிர் கொடுத்தார்.!.
தான் 1939 இல் ஆசைப்பட்ட ‘If I Were A King’ திரைப் பட பாணியில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று தீவிரமானார்..!
எம்ஜிஆர் கதை இலாகாவில் இருந்த திரு.ஆர்.எம்.வீரப்பன் திரு.வி.லட்சுமணன் … திரு.எஸ்.கே.டி.சாமி.. ஆகிய மூவரிடமும்.. கதையை உருவாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்!
அந்த காலகட்டத்தில் வெற்றி பெற்ற திரைப்படங்களான ‘Prisoner of Zenda ’வை தழுவி, … ‘Viva Zabeta’… படத்தையும் இணைத்து ஒரு கதையை உருவாக்க ஆலோசனைகள் தந்தார் …!
மூவரும் போராடி …. மூளைகளை கசக்கி நாடோடி மன்னன் கதையை உருவாக்கினார்கள்!
கதை உருவாக்கத்தில் அவர்களோடு பணியாற்றிய கவிஞர் கண்ணதாசன் அவர்களும் … திரு. ரவீந்தர் அவர்களும் வசனத்தை எழுதினார்கள்..!
திரு.சி.குப்புசாமி, திரு.K. சீனிவாசன் மற்றும். ப . நீலகண்டன்.. ஆகியோர் திரைக் கதையை எழுதினார்கள்..
Script அற்புதமாக அமைந்தது!
நடிகர்.. நடிகையர்.. தேர்வு.. அரங்கங்கள் அமைப்பது.. உடைகள்..தைப்பது… பாடல்கள்.. ஒலிப்பதிவு செய்வது.. படப்பிடிப்பு இடங்கள்.. தேர்வு…என…
pre production வேலைகளே ஒரு வருடம்.. நடந்தது..!
படத்தை இயக்கும் பொறுப்பு… இயக்குனர். திரு.K. ராம்நாத்திடம் ஒப்படைக்கப் பட்டது!..
அவர் எதிர்பாராமல் மரணம்.. அடைய..
திரு.எம்.ஜி.ஆர். அவர்களே நாடோடி மன்னன் படத்தை இயக்க முடிவு செய்தார்..!..
அந்த கால கட்டத்தில் ‘அலிபாபா நாற்பது திருடர்கள் ’ திரைப் படத்தில்
திரு.எம்.ஜி.ஆர். அவர்களும் திருமதி.பானுமதி அவர்களும் நடித்துக் கொண்டிருந்தார்கள்…
அப்போது நாடோடி மன்னன் படத்தின் விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளி வந்தது..!
Prisoner of Zenda வைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம் என்று விளம்பரம் செய்யப் பட்டது!..
அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரும் பிரச்சனையில் நாடோடி மன்னன் திரைப்படம் சிக்கியது!..
அது என்ன?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

