வெளிநாடுகளில் உள்ள மர்ம நபர்கள் சிலர் இந்தியாவில் பலரின் கணக்குகளை ஹேக் செய்து மோசடி செய்து வருகின்றனர். டெலிகிராம் பயனாளர்களின் ஆர்வத்தை துாண்டும் வகையில் குறுஞ்செய்தியும் ஒரு லிங்க்கும் அனுப்புகின்றனர். அதற்கு பதிலளிப்பவர்களுக்கு ‘உங்களின் புகைப்படங்கள் ஆன்லைனில் உள்ளது.
அதனை பெற கிளிக் செய்யவும்,’ எனக் கூறி லிங்க் அனுப்புகின்றனர். அதனை ‘கிளிக்’ செய்ததும், டெலிகிராம் செயலிக்கு வரும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை கேட்கின்றனர்.
அதை பதிவு செய்துவிட்டால் உடனடியாக குறிப்பிட்ட அந்த டெலிகிராம் கணக்கு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடுகிறது. பிறகு அவர்கள் அதை பயன்படுத்தி பல வகைகளில் மோசடி செய்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் இத்தகைய மோசடி நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சமூக வலைதளங்களில் வரும் சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

