திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் கடைசி பகுதியாக சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
ஆகவே, இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கொரோனா நடவடிக்கை காரணமாக, தொடர்ந்து 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
