பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன், திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர். நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில், ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார். இவர், ‘வாராய் நீ வாராய்…’ என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார்.
அவர் பாடி, சாகா வரம் பெற்ற பாடல்தான் ‘புருஷன் வீட்டு வாழப்போகும் பெண்ணே.. தங்கச்சி கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’. சுந்தரம் வாத்தியார் அவர்களின் வரிகளில் கடமை தவறாத அண்ணன் தனது தங்கைக்கு தரும் அறிவுரைகள் அடங்கியதாக இந்தப் பாடல் வெளிப்பட்டது.
பிறகான காலங்களில் இந்தப் பாடலின் பெருமையை விளக்கி, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு உயர்புகழை எட்டியது என்பதும் உண்மை. இந்தப் பாடலில் வெறும் அறிவுரை மட்டும் அடங்கி இருக்கிறது என அசட்டையாக நினைத்துவிட முடியாது.
இதில் காலம் காலமாக காட்டி காப்பாற்றப்பட்டு வந்த தமிழர்களின் அறவுரைகளும் அடங்கி இருந்தது என்பதே உண்மை. இன்றும் நம்மை திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் இந்தப் பாடலை திருச்சி லோகநாதன் பாடி இன்றைக்கு 60 வருடங்கள் கடந்தோடி விட்டன.
அதாவது 1958ம் ஆண்டு டி.எஸ். துரைராஜ் இயக்கத்தில் வெளியான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் அன்றைக்கு பட்டித் தொட்டி எங்கும் போய் முட்டியது. இதையும் மீறி ஒவ்வொரு திருமண வீட்டிலும் மங்கல இசையாக நின்று நிலைத்தது.
இந்தப் பாடலை பாடிய போது திருச்சி லோகநாதனுக்கு 34 வயது. அதாவது 1924 ஆம் ஆண்டு ஜூலை 24ம் நாள் பிறந்த திருச்சி லோகநாதன் தேர்ந்த இசை ஞானம் பெற்ற பிறகான காலங்களில் பாடியுள்ளார். இவரது முதல் திரை இசை பிரவேசம் 1947ல் நடந்தது. தனது 23 வயதில் திரை இசை உலகில் முதல் பின்னணி பாடகராக அவர் கால் பதித்தார்.
அன்று முதல் அவரது குரலைக் கேட்க மக்கள் தவம் கிடந்தனர். .அதிகம் ரசிகர்களை லோகநாதனுக்கு பெற்று தந்த படம் ‘மாயா பஜார்’. ரங்காராவ் நடிப்பில் உருவான ‘கல்யாண சமயல் சாதம்’ பாடலை இவர்தான் பாடி கொடுத்திருந்தார். இவரது குரலுக்கு ஏற்ப ரங்காராவின் அங்க அசைப்பு உச்சம் பெற்றிருந்தது.
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்: திருச்சி லோகநாதன், சம்பள விஷயத்தில் கறார் பேர் வழி. சிவாஜி நடித்த, துாக்கு துாக்கி படத்தில் இடம்பெற்ற, எட்டு பாடல்களையும் பாட, வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாடலுக்கு, 500 ரூபாய் சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச் சொல்லி வலியுறுத்தினர்.
அப்போது, ‘மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார்; அவரை பாடச் சொல்லுங்கள்’ என கூறி விட்டார், திருச்சி லோகநாதன். அவர் சுட்டிக்காட்டிய, டி.எம்.சவுந்தரராஜன் சகாப்தமாக உருவாகினார்
