மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கடையூர். இந்தக் கோயில் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் நடைபெற்று இன்று காலை கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுறுத்தலின்பேரில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதில் குன்றக்குடி ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் உட்பட ஏராளமான மதகுருமார்கள் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜே குமரகுருபரன்,தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்த கோடிகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
