Home Uncategorized திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தெப்பத் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தெப்பத் திருவிழா

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்மன் திருக்கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சைவசமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் சமண மதத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதும் சமணா்கள் அப்பரை முதலில் காள வாசலில் இட்டனா்.  அதிலிருந்து மீண்டு வந்தவரை யானையை விட்டு தலையை இடற செய்ய முயற்சித்தனா். ஆனால் யானை அப்பரை வணங்கிற்று. தொடா்ந்து  அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் போட்டனர். அப்பர் பெருமான் சிவபெருமானை நினைத்துப் பாடினார். அப்போது கல்லானது (உரல்) தெப்பமாக மாறி கடலில் மிதந்ததாக நாயன்மார்கள் வரலாறு  கூறுகின்றன. இதை நினைவுகூறும் வகையில் அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படுகின்றது.

இதனிடையே, இவ்வாண்டுக்கான அப்பர் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு  அம்மன் சன்னதி அருகேயுள்ள பொற்றாமரைத் குளத்தில் யானை மறித்து பின்னா் அப்பரை வணங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

தொடா்ந்து தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வந்தார். பின்னர் தெப்பத் திருவிழா மண்டபத்தில் சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சிக் கொடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version