தமிழகத்தில் சோழ மண்டலத்தில் அமைந்துள்ள தொன்மை மிகு நகர்களுள்ஒன்றான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழி தேரோட்டம் இன்னிக்கு காலை கோலாகோலமாக தொடங்கியது.. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு.
அலங்கரிக்கப்படாத இந்த தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடி ஆகும். தேரின் விமான பகுதி வரை தேர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி என மொத்தம் 96 அடி உயரத்துடன் ஆழித்தேர் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். திருவாரூர் ஆழித்தேர் இதர கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது.
24½ அடி நீளம், 1½ அடி உயரம் கொண்ட 2 இரும்பு அச்சுக்கள், 9 அடி விட்டமும், 1½ அடி அகலமும் உடைய 4 இரும்பு சக்கரங்கள் என தேரின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. தேரின் மேல் கலை பொக்கிஷங்கள் ஏராளமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. எண் கோண வடிவமாக அமைந்துள்ள தேர், குறுக்கு வெட்டு தோற்றத்தில், 20 பட்டைகளாக காணப்படும்.
திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்களுடன் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் தேரில் பொருத்தப்பட்டு உள்ளது. மரத்தேரின் எடை 220 டன். இதன் மீது பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் ½ டன், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் மொத்த எடை 300 டன்னாகும். தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன்.
அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருள்வார். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம் பக்தர்களிடம் நிலவுகிறது.
