தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் வேண்டுகோள். மேலும் தமிழக அரசு பருவ மழைப் பெய்யும் இக்காலத்தில் பொது மக்களின் பாதுகாப்புக்கு போர்க்கால அடிப்படையில் தொடர் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மக்கள் தளபதி ஐயா ஜி.கே.வாசன் எம்பி அவர்கள் இன்று (08.11.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மழைக்காலமான இக்காலத்தில் பொது மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் தலைநகரமான சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல மாவட்டப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை, கனமழையாக பெய்து வருவதால் ஆங்காங்கே பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதி மற்றும் குடிசை வாழ் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் அதன் அருகாமையில் உள்ள பல கிராமப் புறப்பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் இப்போது மீண்டும் 200 மி.மீ அளவை கடந்து மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய செய்தி தெரிவிக்கிறது. இந்த பெருமழையால் மழை வெள்ள பாதிப்பு அதிகமாகும். இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகளை கொண்டு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் மூலம் பொது மக்களை சிரமத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இருப்பினும் மழையால் பாதிக்கப்படுகின்ற மக்களையும், ஏழை, எளிய, சாதாரண மக்களையும் பாதுகாக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும். அது நமது கடமையாக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழக அரசு மழை வெள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் பணிகளில் ஈடுபட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் பாதிப்பில் இருந்து பொது மக்களை பாதுகாக்கவும், இயல்பு நிலை திரும்பும் வரை உதவிகள் செய்திடவும் தமிழக அரசு அவசர, அவசிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.

