தென்தமிழகமாம் தூத்துக்குடி மாவட்டத்தில், வங்கக்கடலோரம் குலசேகரப்பட்டிணத்தில், வளமான வரங்களை வாரிவழங்குபவள் ”அருள்மிகு முத்தாரம்மன்”. பக்தர்கள் மெய்சிலிர்க்க“ குலசை முத்தாராம்மன்” என அழைப்பது வழக்கம்.
வடக்குநோக்கி ஈசனான ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்தநிலையில் அம்பிகை காட்சி தருகிறாள். ஆனாலும், இங்கே அம்பிகையாம் முத்தாரம்மன் பெயரிலேயே இத்திருத்தலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இத்திருத்தலத்தில் அம்பாளின் சக்தியை ஈசனும், ஈசனின் சக்தியை அம்பாளும் பரிவர்த்தனை செய்துகொண்டு அருள் செய்வதாகக் கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் செய்யப்படும் வழிபாட்டு முறையே இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
பெயர்க்காரணம் :
பாண்டிய மன்னர்கள் ஆழ்க்கடல் முத்துக்களை குவித்து, அதனையே அம்மனாக கருதி வழிபட்டதால் “முத்தாரம்மன்” என்று கூறப்படுவதுண்டு. அதுமட்டுமின்றி, அம்மைநோயின் போது உடலில் தோன்றும் சிறு கொப்புளங்களை “முத்து” என குறிப்பிடுவர். இந்த முத்துக்களை ஆற்றும் சக்தி படைத்தவள் என்கிற முறையில், (முத்து + ஆற்று + அம்மன் = முத்தாற்று அம்மன்) காலப்போக்கில் மருவி, முத்தாரம்மன் என்றும் பெயர்க்காரணம் உண்டு.

