Friday, April 17, 2026
Homeஆன்மீகம்பாவங்களை நீக்கும்  பாம்புரநாதர்-ஆலய தரிசனம்!

பாவங்களை நீக்கும்  பாம்புரநாதர்-ஆலய தரிசனம்!

மானிட பிறவிதான் மகத்தான பிறவி என்று கூறினார் அவ்வையார். மனித பிறவி எடுக்கும் முன்னர் பற்பல பிறவிகளை எடுத்து கர்ம வினைகளை கழித்த பின்பே மனித பிறவியை அடைய முடியும் என்று புராணங்கள் கூறுகின்றன.

அப்படிப்பட்ட மனித பிறவியை அடைந்த மனிதர்களாகிய நாம் நிம்மதியாக வாழ்கிறோமா என்றால் அதுதான் இல்லை. பிறந்தது முதல் வாழ்நாள் பூராவும் கஷ்டங்கள் தொல்லைகள் தோஷங்கள் என்று நாம் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ராகு கேது தோஷம் மனிதனை அச்சுறுத்தும் ஒரு பெரிய பிரச்சினையாகும். தோஷங்களை தரும் நமது தந்தையாகிய இறைவன் அதை தீர்க்கும் வழிகளை நமக்கு தராமல் இருப்பானா?

ராகு கேது தோஷங்களை போக்கும் தலங்களாக திருநாகேஸ்வரம் , கீழ்ப் பெரும் பள்ளம் , கால ஹஸ்தி , திருப்பாம்புரம் போன்ற ஆலயங்களை ஆண்டவன் நமக்கு அருளியிருக்கிறான் என்றல் அது நாம் செய்த பூர்வ புண்ணிய பலனே ஆகும்.

அப்படிப்பட்ட அற்புத தலமாகிய திருப்பாம்புரம் திருத்தலத்தை பற்றி விரிவாக காண்போம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த திருப்பாம்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . இது ராகு, கேது ஸ்தலமாகும். ராகுவும், கேதுவும் ஒரே உடம்பாக உருவெடுத்து , இறைவனை மனதில் நினைத்து வணங்கி அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு.‘கருவறையில் நாகம் வந்து வணங்கி செல்லுவதாக கோயில் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பாக ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புண்ணியம் செய்தோர் நாக வழிபாட்டை கண்கூடாக காணலாம். கோயிலுக்குள் நாக நடமாட்டம் ஏற்படும் போது திடீரென மல்லிகை, தாழம்பூ நறுமணம் வீசும். இருப்பினும் பாம்புகள் இதுவரை யாரையும் கடித்ததில்லை’ என்று செவி வழித் தகவல்கள் கூறுவதால், இக்கோயில் பாம்புரநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலம் குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழ்ப்பெரும்பள்ளம் மற்றும் காளகஸ்தி ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம். எனவே இத்தலம் சர்வதோஷ பரிகாரத்தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஈசனின் பஞ்ச முகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம்.

கோயிலின் தெற்கு பிரகாரத்தில் சேஷபுரீஸ்வரர் சன்னதியும், வடக்கு பிரகாரத்தில் வண்டுசேர்குழலி அம்மன் சன்னதியும் உள்ளன. காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 59வது தலமாக விளங்கும் இக்கோயில், திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்றதாகும். திருநாவுக்கரசரும், சுந்தரரும் கோயில் சிறப்புகளை போற்றி தலா ஒரு பாடல் பாடியுள்ளனர். தலவிருட்சமாக வன்னிமரம் உள்ளது.

இறைவன் சன்னதி மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளை கொண்டது. மகா மண்டபத்தில் தென்புறம் சோமாஸ்கந்தருக்குத் தனி இடம் அமைந்துள்ளது. நடராஜரும் நடனம் புரிகிறார். பஞ்ச மும்மூர்த்திகளின் தரிசனம் பரவசமாக்குகிறது. இங்குள்ள உற்சவத் திருமேனிகளில் முருகப்பெருமானின் திருமேனி மிகவும் அற்புதமான ஒன்றாகும்..

வள்ளி, தெய்வானையுடன் கூடிய பெருமான் வஜ்ஜிரத்தையும் வேலையும் தாங்கி, இடது காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார். கருவறையில் பாம்புடன் கூடிய லிங்க வடிவாய் இறைவர் எழுந்தருள்கிறார். ஆதிசேஷன் ஈசனை தொழுத வண்ணம் கருவறையுள் எழுந்தருளியுள்ளார். கருவறையைச் சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது.

‘இறைவனை மாதினை இடமா வைத்த எம் வள்ளல்’ என்று இத்தலத்தைத் தேவாரம் போற்றுவதற்கேற்ப அம்மை, வண்டுசேர்குழலியின் சன்னதியும் இறைவனின் சன்னதிக்கு, இடப்புறமாக வடக்குப் பிரகாரத்தில் அமைந்துள்ளது. அம்மை ஒரு கையில் தாமரையும், மற்றொரு கையில் உருத்திராட்ச மாலையும் கொண்டு, வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம் விளங்க அருள் தோற்றமளிக்கிறார்.

இத்தலத்தில் உள்ள ஈசனையும், அம்மையையும், ராகு, கேதுவையும் வணங்குவோருக்குப் பாவங்கள் நீங்கப் பெறுகின்றன. நினைத்த காரியம் கைகூடுகிறது. இத்தனை சிறப்புக்கும் காரணமாக ராகுவும் கேதுவும் கோயில் ஈசானிய மூலையில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.

ராகு காலங்களில் இச்சன்னதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் விலகி நலம் பெறுகின்றனர். முக்கிய திருவிழாவாக சிவாலயத்திற்குரிய ஏனைய விழாக்களோடு மகா சிவராத்திரியும் மாசி மகமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி இரவு மூன்றாம் ஜாமத்தில் ஆதிசேஷன் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. ராகு, கேது ஸ்தலமாக விளங்குவதால் ராகு, கேது பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். . ஒவ்வொரு ராகு, கேது பெயர்ச்சி காலத்திலும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு ராகு கேது பகவானின் அருளை வேண்டி வருவார்கள்.

திருவாரூர் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் மயிலாடுதுறை பஸ்சில் ஏறி பேரளம் நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம். கும்பகோணம்,மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து செல்பவர்கள் கொல்லுமாங்குடி நிறுத்தத்தில் இறங்கி அருகே கற்கத்தி என்ற இடம் வழியாக செல்லலாம்.

சேஷபுரீஸ்வரரை வணங்கி நலன்கள் யாவும் பெறுவோம்.. ஓம் நமசிவாய!!

– அறந்தாங்கி சங்கர் –

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments