தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (ஏப்ரல் 06) நிறைவடையும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர்கள் மற்றும் பிற மாநில முதல்வர்கள் முன்னிலையில் இன்று தங்களது மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
இன்று மனுத்தாக்கல் செய்யும் முக்கிய வேட்பாளர்கள்:
அவினாசி (தனி): மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்கிறார்.
மயிலாப்பூர்: தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மனுத்தாக்கல் செய்கிறார். இவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொள்கிறார்.
கோவை வடக்கு: பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் மனுத்தாக்கல் செய்யும் போது ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உடனிருக்கிறார்.
மதுரை தெற்கு: பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்கிறார்.
சாத்தூர்: பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்யும் போது மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துகொள்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி, இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. நாளை (ஏப்ரல் 7) மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
