தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 அன்று 75,064 வாக்குச்சாவடிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபாட் (VVPAT) கருவிகளின் பாதுகாப்பு குறித்த விரிவான தகவல்களைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து இயந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் மத்தியப் பார்வையாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்புடன் கூடிய காப்பறைகளில் (Strong Rooms) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் பயன்படுத்தப்படாத கூடுதல் இயந்திரங்களும் தனி அறைகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக வேட்பாளர்கள் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கலாம் என்றும், அவர்கள் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே தங்கி சிசிடிவி காட்சிகள் மூலம் நிலைமையைக் கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

