பொருளாதார ரீதியாகவும் தொழில் வளர்ச்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில், குடும்ப அழுத்தங்கள் காரணமாக இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்ளும் வீதம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் எண்ணிக்கையில் சுமார் 13 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 2,821 இல்லத்தரசிகள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த 2021 (3,221 பேர்), 2022 (3,093 பேர்), 2023 (3,080 பேர்) ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டிலும் மாநிலங்கள் வரிசையில் இல்லத்தரசிகள் தற்கொலையில் தமிழகமே தேசிய அளவில் முதலிடத்தில் நீடிக்கிறது. கடுமையான குடும்பப் பிரச்சினைகள் (38.8%) மற்றும் தீராத உடல்நலக் குறைபாடுகள் (29.3%) ஆகியவையே இத்தகைய விபரீத முடிவுகளுக்கு முதன்மைக் காரணங்களாக உள்ளதாகக் கூறும் மனநல மருத்துவர்கள், இல்லத்தரசிகளின் உழைப்பு குடும்பத்தினரால் அங்கீகரிக்கப்படாமல் போவதும், தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வடிகால் இல்லாத தனிமையும் அவர்களைக் கடுமையான உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார வல்லரசாக உருவெடுத்து வரும் தமிழ்நாட்டில் இந்த நிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இல்லத்தரசிகளின் மனநலனைப் பாதுகாக்கக் குடும்ப அளவிலும் சமூக அளவிலும் முறையான விழிப்புணர்வு மற்றும் ஆதரவு அமைப்புகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
