தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியம் உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞானமுர்த்தீஸ்வரர் சமதே முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்தமிழகமாம் தூத்துக்குடி மாவட்டத்தில், வங்கக்கடலோரம் குலசேகரப்பட்டிணத்தில், வளமான வரங்களை வாரிவழங்குபவள் ”அருள்மிகு முத்தாரம்மன்”. பக்தர்கள் மெய்சிலிர்க்க“ குலசை முத்தாராம்மன்” என அழைப்பது வழக்கம்.
வடக்குநோக்கி ஈசனான ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்தநிலையில் அம்பிகை காட்சி தருகிறாள். ஆனாலும், இங்கே அம்பிகையாம் முத்தாரம்மன் பெயரிலேயே இத்திருத்தலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இத்திருத்தலத்தில் அம்பாளின் சக்தியை ஈசனும், ஈசனின் சக்தியை அம்பாளும் பரிவர்த்தனை செய்துகொண்டு அருள் செய்வதாகக் கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் செய்யப்படும் வழிபாட்டு முறையே இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
பெயர்க்காரணம் :
பாண்டிய மன்னர்கள் ஆழ்க்கடல் முத்துக்களை குவித்து, அதனையே அம்மனாக கருதி வழிபட்டதால் “முத்தாரம்மன்” என்று கூறப்படுவதுண்டு. அதுமட்டுமின்றி, அம்மைநோயின் போது உடலில் தோன்றும் சிறு கொப்புளங்களை “முத்து” என குறிப்பிடுவர். இந்த முத்துக்களை ஆற்றும் சக்தி படைத்தவள் என்கிற முறையில், (முத்து + ஆற்று + அம்மன் = முத்தாற்று அம்மன்) காலப்போக்கில் மருவி, முத்தாரம்மன் என்றும் பெயர்க்காரணம் உண்டு.
தமிழகத்தின் தசரா:
கர்நாடக மாநிலம் , மைசூரில் கொண்டாடப்படுவது தசரா பண்டிகை. அங்கு தர்பார் விழாவாகவும், பொதுமக்கள் தெய்வத்தை வணங்கி , நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் விதமாகவும் அமையப்பெற்றது.அதேபோல் இந்த குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மனுக்கும் தசரா விழா எடுக்கப்படுகிறது. ஆனால் முற்றிலும் வேறுபட்டதாக விளங்குகிறது.
நவராத்திரி பண்டிகைகாலத்தின் முதல் மூன்று தினங்கள் ராகுதோஷத்தினை நீக்கும்வண்ணம் துர்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி ஆகிய கோலங்களிலும்,
அடுத்த மூன்றுதினங்கள் குழந்தைச் செல்வம், காரிய சித்தி, ஆயுள்விருத்தி தரும்வகையில் பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், மஹிஷாசுரமர்த்தினி ஆகிய கோலங்களிலும்,
இறுதி மூன்று தினங்கள் கல்விச்செல்வம், முக்தி அருளும் வகையில் ஆனந்த நடராஜன், மஹாலெட்சுமி, சரஸ்வதி ஆகிய கோலங்களிலும் அம்மன் அருள்பாலிக்கிறாள்.
மறுநாள் மஹிஷியெனும் அரக்கியை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கும் மறுநாள் கொடியிறக்கம், காப்பு களைதல் நிகழ்ச்சி. பன்னிரண்டாம்நாள் பாலபிஷேகம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.
இவ்வூர் அம்மனின் சக்தியினை உணர்ந்த மக்கள், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, கடல்கடந்து சென்றிருந்தாலும் கூட இந்த தசரா விழாவில் கலந்துகொள்ள ஆர்வமுடன் வருவது இன்று நடக்கும் இயல்பு. இதற்காக 48 நாட்கள் விரதமிருந்து வருகின்றனர். தசரா நாட்களில் ஏற்கனவே தங்கள் வேண்டுதல் நிறைவேறப் பெற்ற பக்தர்கள் பல்வேறு வேடங்கள் தரித்து ஆடிப்பாடி பங்கேற்கின்றனர். தமிழகத்தில் வேறெங்கும் இதுபோன்றதொரு ஆன்மீக நிகழ்ச்சி நடைபெறுவதில்லை.
ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையன்று சிறப்பு பூஜை, அம்மன் திருத்தேர் உலா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவில் நடைபெறும் ராகுகால பூஜையில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆண்டு தோறும் ஆவணிமாத திருவோண நட்சத்திர தினத்தன்று, வருஷாபிஷேகமும், பிரதி பெளர்ணமி தோறும் திருவிளக்கு பூஜையும் விமரிசையாக நடைபெறுகிறது. பக்தி சிரத்தையுடன் கைதொழுவோருக்கு, வேண்டுவன எல்லாம் தந்தருள்கிறாள் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன்.
இந்நிலையில், இன்று, குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞானமுர்த்தீஸ்வரர் சமதே முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
