Home Uncategorized திருத்தணி படி பூஜை வரலாறு

திருத்தணி படி பூஜை வரலாறு

இன்று படி பூஜை என்பது தமிழ்க்கடவுளான முருகபெருமானின் அறுபடை வீடுகளில் மட்டுமின்றி, பெரும்பாலான திருத்தலங்களிலும் வெகு பிரசித்தம்.  

திருப்பதியிலிருந்து ஏழுமலையான் கோலோச்சும் திருமலைக்கு நடந்துபோகும் பாதையில் உள்ள படிகளில் அன்றாடம் அநேகமாக யாராவது ஒரு குடும்பத்தினராவது, அங்கு அலிபிரியிலிருந்து தொடங்கும் பாதையில் உள்ள படிகளுக்கு பூஜை செய்தபடிச் சென்று, கோவிந்தா எனும் நாம கோஷத்துடன் பெருமாளை தரிசிக்கின்றனர். இப்படி சனாதன தர்மத்தின் 6 வழிபாட்டுத்திருத்தலங்களிலும் படி பூஜை நடந்து வருகிறது. குடும்பத்தினர்கள் ஒருங்கிணைந்து செய்யும் வைராக்கியம் மிகுந்த இந்த வழிபாட்டின் மூலம், பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறப்பெறுகிறார்கள்.

ஆனால், இந்த படி பூஜை வழக்கம் எப்போது? எங்கு? யாரால்? எதனால் ஆரம்பிக்கப்பட்டது?. 

வள்ளிமலை. 

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது வள்ளிமலை.

ஸ்ரீ வள்ளி பிறந்தது, வளர்ந்தது, முருகனை சந்தித்தது, மணம் முடித்தது அனைத்தும் இம்மலையில்தான். இதனாலேயே, இந்த மலை வள்ளிமலை என பெயர்பெற்றது. 

இங்கே பொங்கி அம்மன் என்னும் திருப்பெயரில் வள்ளி அருள்பாலிக்கிறாள். 

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் நூலில் தன் மனத்தைப் பறிகொடுத்த ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள், அதனை முழுமையாக கற்றுத்தேர்ந்து, அதன் அருளலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பெரும்பணியை வள்ளிமலையில் ஆசிரமம் அமைத்து, தன் வாழ்நாள்முழுவதும் கொண்டு சேர்த்தவர். ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகளே வள்ளிமலை சுவாமிகள் என்கிற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறார். 

இந்த மலை மீது ஆசிரமம் அமைத்து திருப்புகழின் பெருமையை பறை சாற்றி வந்தபோது, கொண்டு வந்த நடைமுறையே ‘இந்த படி பூஜை வைபவம்”. 

வழக்கமாக வள்ளிமலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் திருப்புகழ்ப் பாராயணம், ஆன்மீக விளக்கம், அபிஷேகம், ஆராதனை ஆகிய அனைத்தும் மக்கள் கூட்டத்தால் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பார்ப்பிற்கும் குறைவாகவே மக்கள் கூட்டம் வந்திருந்தது. 

ஆசிரமத்தில் உள்ளவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சுவாமிகள் “ஏன் இன்று மக்கள் அதிகம் வரவில்லை?” எனக் கேட்டார்.

இன்று ஆங்கிலப் புத்தாண்டு. விடுமுறைநாள். 

” இன்றைய தினம் உயர்பதவி வகிக்கும் ஆங்கிலேய துரைமார்களை அவர்கள் இருப்பிடம் தேடிச்சென்று அன்பளிப்புகள் வழங்கி, மரியாதை செய்து வருவது வழக்கமாக உள்ளது. அதனால் அவர்களை கெள்ரவப்படுத்துவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் பொருட்டுதான் இன்று வள்ளிமலையில் கூட்டம் குறைவு” என பதில் கிடைத்தது.  

இதனைக்கேட்டதும், ”அட … ஆங்கிலேயர்களுக்கு வேண்டுமானால் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக இருந்துவிட்டுப் போகட்டும். 

அதற்காக அவர்களது புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வதற்காகவே, உலகத்தில் துரைகளுக்கெல்லாம் துரையான முருகபெருமானை சேவிப்பதைத் தவிர்ப்பதா ? 

அடிமைத்தனத்தில் தேசம் வாழ்வதால் நாம், நம் கலாச்சார வாழ்வியல் மரபை இழக்க வேண்டுமா? 

இது அவமானமல்லவா? நாம் தமிழ்க்கடவுளை வணங்கும் கூட்டமன்றோ?!.” என மனம் வெதும்பினார். 

நமது தமிழ் மண்ணின் மரபுகளை, கலாச்சாரத்தினை மற்றும் வழிபாட்டு முறைகளை உயிர்ப்போடு வைத்திருக்கவும், மக்களின் பாரம்பரிய ஆன்மீகச் சிந்தனைகள் மங்காதிருக்கவும், இவையனைத்தையும் எதிர்காலத் தலைமுறைகளும் ஒருங்கிணைந்து கடைப்பிடிக்கும் சமூகமாக இருக்க வேண்டுமென தீவிரமாக சிந்தித்தார். 

அப்போது அவருக்கு அருணகிரிநாதரின் திருப்புகழ் வரிகளான ”திருப்புகழ் ஓதுங்கருத்தினர் சேருந்திருத்தணி மேவும் பெருமாளே பலகாலம் உனைத் தொழுவோர்கள் திருப்புகழ் கூறி படிமீது துடித்துடன் வாழ் அருள்வேளே…” எனும்,  சிந்தனையில் வந்து சிலிர்த்தது. 

மக்களின் சுய மரியாதையை மீட்டெடுக்கவும், பாரம்பரியப் பெருமைகளை மக்கள் மறவாதிருக்கவும் வள்ளிமலை சுவாமிகள் திருவுளம் கொண்டார். 

அதற்காகவே திருப்புகழ் நூலின் பெயரால், திருப்புகழைப் பாடியவண்ணம்,  திருத்தணி மலையில் உள்ள 365 படிகளிலும் பூஜை செய்யும் வழக்கத்தினை வள்ளிமலை சுவாமிகள் 1918 ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு நாளில் பிரத்யேகமான அனுமதியும் பெற்று தொடங்கி வைத்தார். 

ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே மிகவும் மகிழ்ச்சி கலந்த  எழுச்சியோடு பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், பகவான் இரமண மகரிஷி, ஆகியோருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொடங்கிய இந்த படி பூஜையின் அவசியத்தையும், அதன் பலன்களையும் தன் வாழ்நாள் முழுமையும்,

தீவிர முருகபக்தரான ஆன்மீகச் சொற்பொழிவாளரான திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகள் தான் செல்லுமிடமெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறிய வண்ணமிருந்தார்.  

இது மக்களுக்கு விழிப்புணர்வு தந்தது. 

 

 

 

 

 

 

 

Exit mobile version