திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீடிக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் தராமல் பல முக்கிய விளக்கங்களை அளித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், கடந்த காலங்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக அங்கம் வகித்தபோது அந்தக் கூட்டணி பலவீனமடைவதற்குத் தான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டே சமூக வலைத்தளங்களில் தன்னை இலக்கு வைத்து அவதூறு பிரச்சாரங்கள் பரப்பப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் இரண்டு இடதுசாரி கட்சிகள் தங்களின் அரசியல் முடிவுகளை எடுப்பதைத் தடுக்கும் வலிமை தனக்கு இல்லை என்றும், ஆனால் தற்போதும் கூட சமூக ஊடகங்களில் விசிக-வே குறிவைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விசிக இந்த முடிவை அவசரகதியில் எடுக்கவில்லை என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நிலைமையை விளக்கிய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தவெக ஆட்சியில் இணைவது என்ற விசிக-வின் முடிவு தங்களின் கட்சி நிர்வாகிகளிடையே நடத்தப்பட்ட நீண்ட விவாதங்களுக்குப் பிறகும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்ற பிறகே எடுக்கப்பட்ட ஒன்று என்பதால் தங்களது அரசியல் நேர்மையைக் தயவுசெய்து யாரும் சந்தேகப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருமாவளவன், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதே தனது தனிப்பட்ட விருப்பமாக இருந்தபோதிலும், தங்களுடையது ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால் கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் கருத்துக்குத் தான் உடன்பட்டு ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
