திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டி புதூரில் திருமணமான 78 நாட்களில் கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாகக் கூறி இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகளான 27 வயது ரிதன்யாவுக்கும், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரது மூத்த மகன்வழிப் பேரன் கவின் குமார் என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருமணமாகிய நாளில் இருந்தே கணவர் கவின்குமாரும், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் தொடர்ந்து ரிதன்யாவை சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக யாரிடமும் கூறாமல் இருந்து வந்த ரிதன்யா தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு ரிதன்யா தனது காரில் மொண்டிபாளையம் கோயிலுக்கு சென்றுள்ளார்.
வழியில் சாலையோரம் காரை நிறுத்திய அவர் தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பியுள்ளார். அதில், தொடர்ந்து கவின்குமாரும் அவரது பெற்றோரும் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தன்னை திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து கவின்குமாருடன் வாழ விரும்பவில்லை. அந்த அளவுக்கு தைரியமான பெண் நான் இல்லை. வேறு ஒருவருடன் வாழ்க்கையைத் துவக்கவும் தனக்கு விருப்பமில்லை. எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கணவர் வீட்டில் தனது நகைகள் உள்ள பெட்டியின் சாவி வைக்கப்பட்டுள்ள இடத்தையும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, தான் கொண்டு வந்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மருந்தை உட்கொண்டு உள்ளார்.
வாயில் நுரையுடன் காருக்குள் மயக்கமாகிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக திருப்பூர் மாவட்டம், சேயூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை திறந்து பார்த்தபோது ரிதன்யா உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸார், ரிதன்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிறகு கணவர் கவின்குமார், மாமியார் சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், ரிதன்யா இறப்பதற்கு முன்னர் தனது பெற்றோருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் ரிதன்யா அழுதுக் கொண்டே பேசுகையில் அப்பா என்னை மன்னிச்சிருங்க! போதும், என்னால முடியவில்லை. நீங்கள் என் மீது கோபப்படுவீங்கன்னு தெரியும். என்னை வெறுத்துவிடுவீர்கள் என்றும் தெரியும். காலம் முழுக்க உங்களையும் அம்மாவையும் கஷ்டப்படுத்திக் கொண்டு வேதனைப்படுத்திக் கொண்டு என்னாலயும் நிம்மதியாக இருக்க முடியாமல் , ஊருக்காக என்னால் ஒருத்தனுடன் (கணவருடன்) இருக்க முடியாதுப்பா!
இதை என் தலையெழுத்து என நினைச்சிக்கிறேன். போதும்! நான் முடிச்சிக்கிறேன் என் லைஃப்பை. பஞ்சாயத்து பேசுவது, கோயிலுக்கு பரிகாரம் செய்ய கூட்டிட்டு போறது, இதனால் எந்த ஒரு பிரச்சினையும் தீராதுப்பா! எனக்கு உண்மையாகவே வாழ பிடிக்கவில்லை. எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நான் யாரையும் கஷ்டப்படுத்தியது இல்லை. என் வாழ்க்கை ஏன் இப்படி ஆகியிருக்கிறது என்பதும் எனக்கு புரியவில்லை. நான் போகிறேன்ப்பா, இப்படியே இருந்து இருந்து எந்த விதத்திலும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நான் உங்களுக்கு பிறந்ததே முதல் தப்பு. அந்த குடும்பமே பிளான் போட்டுதான் என்னை திருமணம் செய்து கொண்டார்கள். அவன் பெத்தவங்க கொடுக்கும் மன ரீதியான கொடுமையையும் என்னால் தாங்க முடியவில்லை
கவின் உடல்ரீதியாக கொடுக்கும் டார்ச்சரையும் என்னால் தாங்க முடியவில்லை. என்னை தினமும் உடல்ரீதியாக டார்ச்சர் செய்கிறான். இதை நான் யாரிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது? கேட்கறவங்களும், வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும், சகித்துக் கொண்டு போ, இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்குனுதான் சொல்றாங்களே தவிர நான் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை யாரும் உணரவில்லை. நீங்களும் நான் பொய் சொல்வதாக நினைப்பீர்கள். நான் சத்தியமாக பொய் சொல்லவில்லை. நான் நடந்ததை மட்டும்தான் சொன்னேன். எல்லாருமே நாடகம் ஆடுகிறார்கள். என்னை உங்களால் ஏற்கவும் முடியாது, அப்படியே விடவும் முடியாது. அதனால் நான் காலம் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. என் மேல எந்த தப்பும் இல்லப்பா, சத்தியமா இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கலை. என்னால் இந்த வாழ்க்கையை தொடர முடியும் என தோன்றவில்லை. இவ்வாறு அந்த பெண் கண்ணீர் மல்க பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது ரிதன்யாவின் உடலை பார்த்து தாய் கதறி துடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் முத்தம் குடுத்தா எந்திரிப்பியே மா.. என்று கதறும் தாயின் வார்த்தைகள் பார்ப்போர் மனதை உறைய வைக்கிறது.
