தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று நாகப்பட்டினத்தில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர், திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் சென்றார். நாகையில் புத்தூர் அண்ணா சிலை அருகே மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அங்கே தவெக தலைவர் விஜய் பேசுகையில், ”நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசி பெற்ற மண், மீனவ நண்பனாக வந்துள்ளேன். என் மனசுக்கு நெருக்கமான நாகை மாவட்டத்துக்கு நான் வந்துள்ளேன். உழைக்கற மக்கள் இருக்கற ஊர்தான் நம்ம நாகை மாவட்ட மக்கள், மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நாகை மக்களுக்கு ஸ்பெஷல் வணக்கம்.
இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணங்கள் பற்றியும், தீர்வுகள் பற்றியும் மதுரை மாநாட்டில் நான் பேசினேன். அதுவொரு தப்பா? மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நம் கடமை, உரிமைதானே? மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக திமுக கிடையாது. இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்கள் என பிரித்து பார்க்க நாம் பாசிச பாஜகவும் கிடையாது.
நான் என்ன இன்று நேற்றா மீனவர்களுக்கு குரல் கொடுக்கிறேன்? இதே நாகையில் 14 வருடங்களுக்கு முன்பு பிப். 22, 2011-ல் மீன்வர்கள் தாக்கப்பட்டது குறித்து பொதுக்கூட்டம் நடத்தினோம்தானே. இந்த விஜய் களத்துக்கு வற்றது ஒன்னும் புதுசில்ல கண்ணா. முன்பு விஜய் மக்கள் இயக்கமா வருவோ. இப்போது தவெக என்ற அரசியல் இயக்கமா வர்றோம். அவ்வளவுதான் வித்தியாசம். அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காக நிற்போம். இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
தமிழ்நாட்டின் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலிருப்பது நாகை துறைமுகம்தான், ஆனால் இங்கு நவீன வசதிகளுடன் கூடிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள்கூட இங்கு இல்லை. அதிகப்படியான குடிசை வீடுகள் இங்கு இருக்கிறது ‘இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி’ என அடுக்குமொழியில் பேசுவோரை கேட்டு கேட்டு, நம் காதில் இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம்.
மீனவர்கள் தொடர்பாக கடிதம் எழுதிவிட்டு, அமைதியாக இருக்க, நாம் கபடநாடக திமுக அரசும் இல்லை. மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள், நம் மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள் என பிரித்து பேச, நாம் பாசிச பாஜக அரசும் இல்லை. நிரந்தர தீர்வு கோருவதே எங்களின் முக்கிய நோக்கம்” என்று மக்கள் மத்தியில் மிகவும் காட்டமாக பேசியிருக்கிறார்.
