ஒரே பிறப்பில் இரண்டு அவதாரங்கள்! – பகுதி2
(விருதுநகரில் ஒரு சித்தரின் ஜீவசமாதி)
மு.பழனிவாசன்
“ஒரே பிறப்பில் இரண்டு அவதாரங்கள்!” என்கிற தலைப்பில் எனக்கு மிகவும் பிரமிப்பூட்டிய ஒரு விஷயம் பற்றிய தொடர்பதிவு இது.
ஒரு திருமண நிகழ்வுக்கான பூச்சூட்டு விழாவிற்காக விருதுநகருக்குச் சென்றேன். அங்கு நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள “திருப்புகழ் சுவாமிகள்”என்கிற சித்தரின் ஜீவசமாதி குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், நேரில் சென்று தரிசித்ததில்லை. அதற்கான வாய்ப்பு 08-02-2026 அன்று கிட்டியது. காலை ஏழு மணிக்கெல்லாம் மைத்துனர் திரு.வைரமணி அவர்கள் என்னை இரு சக்கர வாகனத்தில் கொண்டு அங்கே சேர்த்து விட்டார். வெளியில் தனி சந்நிதியில் விநாயகரை ஒரு நடுத்தர வயது நபர் அலங்கரித்துக்கொண்டிருந்தார்.
அப்போது மூளைக்குள் மின்னல் வெட்டியது. “சித்தர் ஜீவசமாதிக்கு வெறுங்கையோடா போவது?” என்று மனம் கூசியபின், ஒரு மாலை வாங்கி வந்தேன். கோயிலின் உள்ளே சென்றேன்.

ஜீவசமாதி அமைந்திருக்கும் அழகு மிளிரும் சித்தரின் ஜீவசமாதி அருளலை பரப்பும் சிறிய கோயிலுக்குள் நுழைந்தேன். அங்கே ஜீவ சமாதியின் வாசலில் ஒரு தொண்டு பெரியவர் (பெயர்: சுப்ரமணி) விபூதிப்பொட்டலங்கள் பரப்பி வைக்கப்பட்ட தட்டு வைக்கப்பட்டிருந்தது. அருகில் ஒரு சிறிய மண் சட்டியில் வில்வம், வேப்பம் இலைகளை நிரப்பி, அவற்றில் ஊதுபத்தியால் புகையை மூட்டிக் கொண்டிருந்தார். ஈழே அமர்ந்த நான் ஜீவசமாதியை மட்டுமே உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். அப்போது வெளியே விநாயகர் கோயிலில் அலங்காரம் செய்து கொண்டிருந்த திரு. சபரீஸ்வரன் (தொண்டு பெரியவரின் மகன்) உள்ளே வந்தார். அப்போது பெரியவர் என்னை சைகையால் அழைக்க, நான் குழப்பத்துடன் எழுந்து அவர் அருகில் சென்றேன். முந்தையநாள் ஜீவ சமாதியில் சாற்றிய மாலை கழற்றப்பட்டு படியில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது உள்ளே வந்த திரு.சபரீஸ்வரனை அழைத்து, அந்த மாலையை பெரியவர் அதை எடுத்துத்தருமாறு மகனிடம் கேட்க, அவரும் அதனைப் புரிந்து கொண்டு, அந்த மாலையை எடுத்துத் தந்தார். 30 செகண்ட் நேரம்தான். தான் கையில் வாங்கிய அந்த மாலையை என்னை குனியச் சொல்லி கழுத்தில் சூட்டினார். விபூதி பூசினார். வலது தோள்; இடது தோள் இரண்டிலும் விபூதி வைத்தபின், தலையிலும் கைவைத்து ஆசீர்வதித்தார். அப்போது, அதுவரை என் உடலில் இருந்த பயணக்களைப்பு, முந்தைய நாள் அசதி எல்லாம் விட்டு அகன்றதை உணர்ந்தேன். இதற்குப்பின் அங்கேயே சுமார் முக்கால் மணி நேரம் அமர்ந்திருந்துவிட்டு, அவரிடம் இரண்டு விபூதி பொட்டலத்தை வாங்கிக்கொண்டு, கொடுக்கப்பட்ட மாலையுடன், என்னையும் அறியாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே, நான் போகவேண்டிய அருப்புக்கோட்டை சாலையில் இருக்கும் தங்கச்சி அம்மன் கோயில் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தேன். என்னையுமறியாமல் மனதில் ஒரு உத்வேகம்!
அந்த பெரியவர் மற்றும் அவர் மகனைப் பற்றி சில வார்த்தைகளை அவசியம் குறிப்பிட வேண்டும். அதாவது, தமிழகத்தில் மது விற்பனையை அரசாங்கமே (டாஸ்மாக்) ஏற்று நடத்தத் தொடங்குவதற்கும் முன் தனியார் மயமாகவே இருந்தது. அப்போது நான்கு மதுபானக்கடையையும் அதனுடன் இணைந்த மதுக்கூடத்தையும் (பார்) நடத்தி வந்தவர் திரு.சுப்ரமணி அவர்கள். ஒரு கட்டத்தில் அவர் தொழில் சூழல் மாறியது. ஏகப்பட்ட பொருளாதார ரீதியில் பேரிழப்பு ஏற்பட்டது. ஆனால், இறைவன் நினைத்தது வேறு. மெல்ல, மெல்ல அவர் மனம் ஆன்மீகப்பாதையில் அடியெடுத்து வைத்தது. ஏதோ ஒருவகையில் திருப்புகழ் சுவாமிகளின் ஜீவாசமாதி அமைந்திருக்கும் கோயிலில் சரணடைந்தார். அது முதற்கொண்டு அங்கேயே தன் தொண்டினைத் தொடர்ந்தார். அவர் வாழ்வு அப்போதுதான் அவருக்கே பிடித்தமானதாக ஆனது. அதனால், இன்றுவரை அந்த சித்தரின் ஜீவசமாதியைப் பரமாரிக்கும் அணுக்கத் தொண்டரானார். அவருக்கு செவித்திறன் அறவே அற்றுபோய்விட்டது. ஆனால், மனதளவில் சித்தரின் அடிப்பொடியாக இன்னும் அப்படியே வாழ்கிறார்.
அது ஒருபுறமிருக்க, இன்னொரு விஷயத்தையும் இங்கே கூற வேண்டும். அதாவது அந்த பெரியவர் திரு. சுப்ரமணி அவர்களின் மகன் திரு.சபரீஸ்வரன். தன் இளம் பிராயத்தில் தன் போக்கில் வாழ்ந்த மனிதர். கடவுள் நம்பிக்கை குறிப்பாக சிவனைப்பற்றிய சிந்தனை ஏதுமின்றி வாழ்ந்தவர். அப்படிப்பட்டவருக்கு ஒரு விபத்து நடந்திருக்கிறது. அவரது உயிருக்கு உத்திரவாதம் தர எந்த மருத்துவரும் முனையவில்லை. காரணம், அவரது மண்டை ஓட்டைத் திறந்து ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதை செய்து முடித்தாலும் கூட, அவர் தக்க நினைவலைகளுடன் ஆரோக்கியமாக தொடர்ந்து ஜீவிப்பது கடினம் என்கிற சூழல். மருத்துவர்கள் ஒரு வாரம் கெடு விடுத்திருக்கிறார்கள். உலக மகா அதிசயமாக அறுவை சிகிச்சை நடந்த இரண்டாம் நாளே அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் வழக்கமான சுயநினைவுடன் ஆரோக்கியமாக எழுந்துவிட்டார். இது நடந்து பல ஆண்டுகளாகி, இன்றும்கூட அந்த சித்தரின் ஜீவசமாதிக்கான கைங்கர்யங்களை தன்னாலான வகையில் சிறப்பாக செய்து வருகிறார் என்பது ஆச்சரியமான உண்மை.
இங்குதான் இக்கட்டுரையின் தலைப்பை மீண்டும் நினைவுகூர எண்ணுகிறேன். ஒருவர் தன் வாழ்நாளில் பொருளாதார நிலையில் ‘உச்சம், மத்திமம், பரவாயில்லை, படுமோசம்” என்கிற நிலைகளைக் கடப்பது இயற்கை நியதி. அவரவர்தம் பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்டது. அதேவேளையில் முற்றிலும் வேறான நேரெதிர் பாதையில், அதிலும் குறிப்பாக ஆன்மீகத்தில் பயணிப்பது ஆச்சரியம்தான். சித்தாந்த ரீதியில், நல்லொழுக்கப் பாதையில், ”எல்லோரும் நன்றாக வாழ வேண்டும்” என்கிற பரந்துபட்ட மனதுடன், தாங்கள் தொண்டு செய்யும் தெய்வ சந்நிதானத்தில், ”கிடையாய்க் கிடப்பது” அவ்வளவு எளிதில் எவருக்கும் கைவரப்பெறாது. ஆனால், இந்த தகப்பனுக்கும், மகனுக்கும் அது கைகூடியிருக்கிறது.
ஏதாவது ஒரு பிரச்சினையில், ஏதோ ஒரு நோயில் வீழ்ந்து, படாதபட்டு மீண்டெழுந்து வந்துவிட்டால், ”இது எனக்கு மறுபிறப்பு!” என்று பலரும் கூறுவதுண்டு. அது உண்மைதான். பிரச்சினைகளை சந்தித்திருந்தால், குழப்பமும், மாயையும் அகலுகிறது. ஆணவம் அழிகிறது. ஞானம் பிறக்கிறது. சிந்தனைத்தெளிவினால் புதிய பாதை புலப்படுகிறது. வாழ்வு மறுமலர்ச்சி காண்கிறது. அதேநேரம் நோயிலிருந்து மீண்டால், “செத்துப்பிழைத்தேன்! அப்பா.. சாமீ… பொழைச்சிக்கிட்டேன்! இப்பதாங்க முன்னே மாதிரி என்னால கொஞ்சமாவது வேலை செய்ய முடியுது!” என்றெல்லாம் சொல்வதுண்டு. அதேபோல் அவர்களுக்கு தீயப்பழக்கங்கள் ஏதேனும் இருந்து, அதனால பாதிப்புக்காளாகி பின் அதிலிருந்து மீண்டுவிட்டால், மீண்டும் அதன் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு அது மறுபிறப்பு போலத்தான். பெண்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் வயிற்றில் கருவைச் சுமந்து தாயாய் மாறுவதும் இன்னொரு அவதாரம்தான். பொதுவாக எல்லோரும் குறிப்பிட்ட நிலையில் பக்குவம் பெறுவதும் மறு அவதரம்தான்.
ஆக, ஒரே ஜென்மம். ஆனால், இருவேறு பரிணாமங்கள். அதாவது இரண்டு அவதாரங்கள். இறைவன் வாழ்க்கையை இப்படித்தான் நமக்கு அருளி விளையாட்டு காட்டுகிறான். ஆனால், நாம் தான் ஏதோ அறியாமையால், ஆணவத்தால், ஏதேதோ விளையாடிவிடுகிறோம். ஆனால், நாம் விரும்பியோ, விரும்பாமலோ இறைவன் தன் கடமையை செவ்வனே செய்கிறான். நாம்தான் புரிந்து கொள்ள மறுத்து அடம்பிடிக்கிறோம். மாயையில் சிக்குண்டு இறைத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் மனிதத்தையே களங்கமாக்குகிறோம். இறைவனின் லீலைகளை நாம் ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது.
இதைப்படிக்கும் உங்களுக்கும், எழுதிய எனக்கும் இந்த பிறவிக்கு உள்ளேயே ஏதாவது மறு அவதாரம் இருக்குமா? அப்படி இருந்தால் அது எப்படி இருக்கும்? எல்லாம் இறைவன் செயல்.
எல்லோருக்கும் நலமே நிறைக. வளமே விளைக.
திருப்புகழ் சுவாமிகள் ஜீவசமாதி கோயிலில் உள்ள பழமையான முரசு.

Also read:

