Homeசெய்திகள்சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்கப் புள்ளி விவரத்தின் பின் ஒளிந்துகொள்வதா? டிஜிபி பேட்டிக்கு உதயநிதி...

சட்டம் – ஒழுங்கு தோல்வியை மறைக்கப் புள்ளி விவரத்தின் பின் ஒளிந்துகொள்வதா? டிஜிபி பேட்டிக்கு உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

தவெக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீராக இருப்பதாகக் கூறி காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அளித்த பேட்டி, உண்மை நிலையை மறைப்பதாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வழக்குகள் 74 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கொலைகள் குறைந்துள்ளதாகவும் டிஜிபி கூறியது நகைப்புக்குரியதாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி அன்று மட்டும் 17 உயிர்கள் பறிபோன நிலையில், கொலைகள் குறைந்துவிட்டதாகக் கூறுவது நிர்வாகத்தின் அவலம் என்றும், அப்படியெனில் அவசர ஆலோசனைக் கூட்டம் எதற்கு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப்பொருள் வழக்குகள் அதிகரித்துள்ளது தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைப்பதையே காட்டுவதாகவும், நோய் முற்றியிருப்பதை ஒப்புக்கொள்ளாமல் அதிக மாத்திரை கொடுப்பதாகப் பெருமை பேசுவது போல உள்ளதாகவும் சாடியுள்ளார்.

அரியலூரில் ஊர்க்காவல் படை வீரர் மற்றும் தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் போதை ஆசாமிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 137 கிலோ மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த தவெக நிர்வாகி பூபாலனை ஒன்றிய வருவாய் புலனாய்வுப் பிரிவினர்தான் கைது செய்தனர் என்றும், அவரைப் பாதுகாத்தது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிக்கி வருவதாகவும், காரமடை, திருவண்ணாமலை, கோயம்பேடு மற்றும் கள்ளக்குறிச்சி விவகாரங்களைச் சுட்டிக்காட்டி, தவெகவால் பாதிக்கப்பட்டோர் வழக்குப் பிரிவு தொடங்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகக் கூறிய உதயநிதி, புள்ளிவிவர வித்தைகளை விட்டுவிட்டு மக்களின் உண்மையான பாதுகாப்பைக் களத்தில் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments