Tuesday, August 4, 2026
Homeசெய்திகள்திரிஷா குறித்து பேசியது சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் புகார் அளிக்க தவெக...

திரிஷா குறித்து பேசியது சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் புகார் அளிக்க தவெக முடிவு!

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பேச்சின்போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து விமர்சனம் செய்ததோடு, நடிகை திரிஷாவை குறிப்பிட்டு பேசியதாகவும், அந்தக் கருத்துகள் முதலமைச்சரின் கண்ணியத்தையும் தனிப்பட்ட மரியாதையையும் அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் கருத்துகளே தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய சர்ச்சையாக மாறியுள்ளன.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சட்டப்பூர்வமாக புகார் அளிக்க தமிழக வெற்றிக் கழகத் தலைமைக் கழகம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தங்கள் மாவட்டங்களின் முக்கிய காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புகார் மனுவில், முதலமைச்சர் குறித்து அவதூறாகவும், கண்ணியக்குறைவாகவும் பேசியதாகவும், நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி தேவையற்ற கருத்துகளை வெளியிட்டதாகவும் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்திற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் விமர்சனத்தின் பெயரில் தனிநபர் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் ஏற்க முடியாதவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், எதிர்க்கட்சித் தரப்பும் இந்த விவகாரம் குறித்து தங்களது விளக்கங்களை வழங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் புகார் அளிக்க தவெக எடுத்துள்ள இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அடுத்தகட்ட அரசியல் மற்றும் சட்டரீதியான நகர்வுகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments