Home Uncategorized உலக மழைக்காடுகள் நாள்

உலக மழைக்காடுகள் நாள்

குளிர் சூழ்ந்த மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது, நெடிதுயர்ந்த மரங்களைக் கொண்ட அடர்த்தியான காடுகளைப் பார்த்திருப்போம்.

அவைதான் மழைக்காடுகள் (Rain Forests). மழைக்காடுகள் என்கிற சொல்லுக்கு ‘சோலை’ என்ற அழகான தமிழ்ப்பதம் இருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர்களில் மரங்களை நட்டாலும் மழைக்காடுகளை நம்மால் உருவாக்க முடியாது.

மழைக்காடுகளின் கட்டமைப்பும், பல்லுயிர் வளமும் இன்று நேற்று உருவானதல்ல. கடலோரக் காடுகள், காப்புக் காடுகள், அலையாத்திக் காடுகள், மழைக்காடுகள் என, பல வகையான பகுப்புகளைக் காடுகள் கொண்டிருக்கின்றன.

இதில் மழைக்காடுகள் மனித வாழ்வுக்கு மிகப்பெரிய பங்கை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. மழைக்காடுகளின் மரங்கள் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து, ஆகிருதியான உயரத்தைப்பெற்றிருக்கின்றன. மழைக்காடுகளின் வளம் மிக்க மண் உருவாவதற்கே பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.

மழைக்காடுகள் பொதுவாக மூன்று அடுக்குகளில் அமைந்திருக்கும். முதல் அடுக்கில் வளமான மண்ணும் பூச்சியினங்களும், பாம்பு, பூரான் போன்ற ஊர்வனங்களும் வாழும். இரண்டாம் அடுக்கில் புதர் மண்டிய அடர்த்தியான பகுதியில் காட்டுக்கோழி உள்ளிட்ட மற்ற உயிர்கள் வசிக்கும். மூன்றாம் அடுக்கு, மரங்களின் உச்சிக்கிளைகள்.

சிங்கவால் குரங்கு உள்ளிட்ட விலங்குகள் இவ்வடுக்கில்தான் வாழும். சூரிய ஒளி ஊடுருவக்கூட இடைவெளி இல்லாமல் மரங்களும் புதர்களும் அடர்த்தியாக மழைக்காடுகளில் செறிந்து காணப்படும். மழைக்காடுகளின் ஒரு மரம் என்பது பல வகையான பூச்சியினங்கள், பறவைகள், ஊர்வன போன்ற பல்லுயிர்கள் வாழும் வாழிடம்.

வானிலிருந்து பொழியும் மழையைத் தேக்கிவைத்து (Water Shed), சிறு சிறு ஓடைகளாக உருவாக்கி, ஓடைகளை ஆறுகளாக்கி சமவெளிப்பகுதிகளை வளமாக்கும் இன்றியமையாத பணியைக் காடுகள் செய்கின்றன.

சுற்றுலாவுக்காகவும், மரங்களுக்காகவும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளைக் காக்கும் பொருட்டு, 1927ஆம் ஆண்டு இந்திய அரசு வனச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது என்றாலும், காடுகள் அழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.

மனித வாழ்வுக்குத் தேவையான இயற்கைச் சமநிலை நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் 11 சதவீதம் காடுகளே தற்போது இருக்கின்றன. ஆம்.. இப்போது உலகம் முழுவதும் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன.

மழைக்காடுகளை நாம் காப்பாற்றவில்லை என்றால் அங்குள்ள தாவரங்கள், உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும். அது மட்டுமில்லாமல் மழைப்பொழிவு, நதிகளில் தண்ணீர் வருவது உள்ளிட்ட இயற்கை வளங்களும் நமக்குக் கிடைக்காமல் போகும் என்பதை உரக்கச் சொல்லும் நாளிது

Exit mobile version