தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சென்ற 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டி என்பதால் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.
ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சையாக மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சையாக களம் இறங்கினர்.
வாக்குப்பதிவுகள் நிறைவுற்ற நிலையில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட 41 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள் 74 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்டு என்ற அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
வாக்கு சீட்டுகளில் ஏதேனும் திருத்தம் செய்து விடக்கூடாது என்பதற்காக ஏஜெண்டுகள் பேனா கொண்டு செல்ல அனுமதியில்லை. பதிவான வாக்குகளை குறிப்பதற்காக பென்சில் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தண்ணீர் பாட்டிலோ, வேறு எந்த பொருட்களோ கொண்டு செல்ல அனுமதி கிடையாது. செல்போன்களை கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவை அறிவிக்கும்போது பல இடங்களில் மோதல்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
