தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சொந்தச் சட்டமன்றத் தொகுதியான சென்னையின் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் கடுமையான, அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தவெக அரசுக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பகல் நேரங்களில் நிலவும் கடுமையான கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அவதியுற்று வரும் சூழலில், இரவு நேரங்களிலும் நீடிக்கும் பல மணி நேரத் திடீர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தப் (Low Voltage) பிரச்சினைகளால் குழந்தைகளும் முதியவர்களும் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சாரம் இல்லாததால் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் பொதுமக்கள் வீதிகளில் இறங்கித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர்கள் சாக்குபோக்கு சொன்ன அன்றிலிருந்துதான் மாநிலம் முழுவதும் மின்தடை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்ற பாணியில் தவெக அரசின் நிர்வாகச் செயல்பாடு அமைந்துள்ளதை விவரித்துள்ள தினகரன், மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்சாரத்தை எவ்விதத் தடையுமின்றி வழங்க மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் முறையான பராமரிப்புப் பணிகளில் மின்சார வாரியமும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
