உருவமில்லா காமாட்சி – மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில்”
தமிழகத்தின் காஞ்சி மாநகரில் கோலோச்சும் அன்னை காமாட்சி, தமிழகத்தின் வேறொரு ஊரிலும் அருள்பாலிக்கிறாள் என்பது ஆச்சரியமான உண்மை. தேனி மாவட்டம் வத்தலகுண்டு – பெரியகுளத்திற்கு இடைப்பட்டு அமைந்திருக்கும் ஊர் “தேவதானப்பட்டி” . இந்த ஊரின் “அரிசிக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து” சுமார் 5 கி.மீ. தூரத்தில் . மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது “மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயில்” . அளவற்ற பேரருளை தன்னுள்ளே கொண்டுள்ள மூங்கிலணை காமாட்சிக்கென அவளது திருக்கோயிலில் உருவம் கிடையாது. கர்ப்ப கிரஹத்திற்குள் நெய் விளக்கு மட்டுமே சுடர்விடும். கதவுக்கு மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
முற்காலத்தில் வஜ்ஜிரத்தன் என்னும் அசுரனை காமாட்சி அம்மனே துர்க்கையாக மாறி , வதம் செய்தாள் . மிகவும் உக்கிர கோலமுடன் விளங்கிய அவள், அசுரனைக் கொன்ற தோஷம் போக்கவும், தனது உக்கிரம் தணியவும் மஞ்சள் பூசி நதியில் நீராடினாள். அதனாலேயே அந்த நதிக்கு மஞ்சளாறு என்றும், பிற்காலத்தில் அதன் குறுக்கே அணை கட்டியதும், அதற்கு மஞ்சளாறு அணை என்றும் பெயர் ஏற்பட்டது.
மஞ்சளால் நீராடிய அம்மன் மலை மீது “அம்மா மெச்சு” எனப்படும் பகுதியில் அடர்ந்த மூங்கில் வனத்தில் தவமிருக்கத் தொடங்கினாள். அப்பகுதியில் ஆடு , மாடுகளை மேய்த்த ஒருவன் அங்கு தவமிருந்த அம்மனின் பேரொளியைக் காண நேர்ந்தது. உடனே அவனது பார்வை பறிபோனது. அலறித்துடித்த அவனுக்கு அசரீரி வாக்குமூலம் “காமாட்சியான நான் குறிப்பிட்ட நாளில் பெட்டியின் மூலம் நதிவழியே வருவேன். அப்போது என்னை இனம் கண்டு பூசித்தால், பார்வையை திரும்பப் பெறுவாய்” ஒலித்தது. நடந்தவை அனைத்தையும் அந்த பகுதி ஜமீந்தாரருக்கும், ஊர்மக்களுக்கும் தெரிவித்தான்.

