பாற்கடல் நாயகன் நாராயண மூர்த்திக்கான 108 திவ்யதேசங்களில் முதன்மையான தலம் திருவரங்கம் எனப்படும் ”ஸ்ரீரங்கம்” . இந்த தலத்தின் நாயகன் ஸ்ரீ ரெங்கநாதர் மீது கொண்ட அலாதி பக்தி கொண்டவள்
ஸ்ரீ வில்லிப்புத்தூர் கோதை நாச்சியார் எனும் ஸ்ரீ ஆண்டாள். 12 ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் என்னும் பெருமை பெற்றவள் ஸ்ரீ ஆண்டாள்.
பெருமாளின் திருவுளப்படி, பெரியாழ்வாரின் பக்திக்குப் பரிசாக தமிழ்மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் “பூரம்” நட்சத்திர நன்னாளில் துளசித் தோட்டத்தில் அழகிய பெண்மகவாய் பெரியாழ்வாருக்கு காணக்கிடைத்தாள் ஸ்ரீ ஆண்டாள். அந்த நிமிடம் முதல் அவர் தனது வளர்ப்பு மகளாக, “கோதை” எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார்.
அழகில் மட்டுமல்ல அன்பிலும் பண்பிலும் இனியவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஒப்பற்றவளாக விளங்கினாள் கோதை எனும் ஸ்ரீ ஆண்டாள். இறைவனின் திருநாமத்தையே சுவாசமாக்கி, தீவிர பக்தியில் திளைத்திருந்த ஸ்ரீ ஆண்டாள் , பருவ வயதினை எட்டினாள். அதீதமான , அலாதியான பக்தி மேலீட்டால் தான் மனமுருக பிரார்த்தித்த நாராயண மூர்த்தியையே தனது கணவனாக மானசீகமாக வரித்துக்கொண்டாள். இதற்காக “பாவை நோன்பு” மேற்கொண்டாள். இறைவனை தரிசிப்பதை அதிலும் மார்கழிப்பனி நாளில் அதிகாலை வேளை தோழியர் புடை சூழ, “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்…” என்று தொடங்கும் பாசுரங்கள் இயற்றிப் பாடினாள். இதுவே இன்றும் “ஆண்டாள் திருப்பாவை” என பெரும்புகழுடன் விளங்குவது மட்டுமின்றி, தமிழ்மொழிக்கு தலைசிறந்த அழகாபரணமாக விளங்குகிறது.
ஸ்ரீஇ ஆண்டாளின் வளர்ப்புத்தந்தை பெரியாழ்வார் இறைவன் பெருமாளுக்கு சூடும் மாலையை கட்டிவைக்க, அதனை தனக்கே அணிவித்துக்கொண்டு , நாரயணனுக்கு தான் பொருத்தமாக இருப்பேனா? என தனக்குத்தானே ஆவல் மேலிட மனம் பூரிப்பாள். இப்படியொருநாள் செய்கையில் தற்செயலாக பெரியாழ்வார் கண்ணுற்று அதிர்ந்தார். அது மட்டுமா? அவள் பெருமாளையே தன் கணவனாகக் கொள்ள வேண்டும் எனும் தீராத ஆவலில் உள்ளதை அறிந்தார்.
இறைவனின் அருளால் வளர்ப்பு மகளாக கிடைத்த மகள், “பெருமாளை மணக்க இயலுமா?! இது நடக்கிற காரியம்தானா?!” என தாங்கவொண்ணா வேதனையில் ஆழ்ந்து போனார் பெரியாழ்வார். ஒரு நாள் அவரின் கனவில் பெருமாள் தோன்றி, ஸ்ரீ ஆண்டாளின் விருப்பப்படி அவளை தானே திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், ஆகையால் அவளை மணக்கோலத்தில் ஸ்ரீ ரங்கம் சன்னநிதிக்கு வருமாறு பணித்தார். அதன்படி சென்ற ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கம் கருவறையில் அனைவரும் அதிசயிக்கத் தக்கவண்ணம் இறைவனுடன் கலந்து ஐக்கியமாகி, தன் வாழ்நாள் குறிக்கோள் நிறைவேறப்பெற்றாள்.
இத்தகைய பெரும் சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த நாளான , “ஆடி மாதம் பூர நட்சத்திர” நன்னாள் வைணவ சமயத்தில் மறக்க முடியாத இடம்பெற்று நிலைத்துள்ளது.
ஆடிப்பூரம் விசேஷம் வைணவத்தில் மட்டுமா? என்றால் இல்லை. சாக்தம், சைவம் இணைந்த மரபிலும் பெரும்புகழ் பெற்றுள்ளது. இதனை மக்கள் வெகுவிசேஷமாக கொண்டாடி வருகிறார்கள்.
உலகம்மையாம் அம்பாள் இந்த பூமியைக்காக்கும்பொருட்டு, உலகத்தார் நலன்காக்க இறங்கி வந்த நாள் ஆடி மாதத்தில் வரும் “பூரம் நட்சத்திர நன்னாள்” ஆகும். பிற நாட்களில் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடிப்பூரம் தினத்தன்று, அம்மனை தங்கள் மகளாக பாவிக்கும் பெண்கள் அவளுக்கு கண்கவர் வளையல்களை காப்பாக அணிவித்து மகிழ்கிறார்கள். அதுமட்டுமல்ல …. பிறருக்கும் அம்மனின் அருள் பரவட்டும் எனும் நல்லெண்ணம், நற்பண்பு, சமத்துவ நோக்கம் ஆகியவற்றுடன் அம்பாளுக்கு அணிவித்த வளையல்களை அக்கம்பக்கத்தின் அனைத்து பெண்களுக்கும் தந்து மகிழ்கின்றனர். ஆடிப்பூர நன்னாளில் அம்பாளை வேண்டிக்கொண்டு விரதமிருந்தால், தம்பதியர் ஒற்றுமை, குழந்தை வரம், மற்றும் பகைவர்களை வெற்றிகொள்ளும் அருள் ஆகியன கிட்டுகிறது.
வைணவத்தில் பெருமாள் திருத்தலங்கள் இருக்குமிடமெல்லாம் ஸ்ரீ ஆண்டாள் இருப்பாள். ஸ்ரீ ஆண்டாளின் அவதாரத் திருத்தலமாம் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் மட்டுமின்றி, அனைத்து வைணவத்திருத்தலங்களிலுமே “ஆடிப்பூரம்” முன்னிட்டு வளையல் அணிவித்து வணங்கி, அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பக்தியினை மட்டுமின்றி தங்கள் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தும் பெண்களுக்கான விழாவாக விளங்குகிறது.
இப்படி வைணவம், சைவம் ஆகிய இரண்டிலுமே “ஆடிப்பூரம்” சிறப்பான அங்கம் வகிக்கிறது. சமூக நல்லிணக்கத்தைப் பேணும் சனாதன தர்மத்தின் புகழை நிலைநிறுத்துகிறது.

