தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், தமிழ் திரைத்துறையின் புரட்சிக் கலைஞருமான திரு. விஜயகாந்த் அவர்கள் மறைவுக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் இரங்கல் அறிக்கை
தமிழ் திரைத்துறையின் புரட்சிக் கலைஞர்; இலட்சக்கணக்கான தொண்டர்களால் கொண்டாடப்படும் கேப்டன்; எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
ஒரு நடிகராகத் தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் படங்கள், தேசிய பற்றும் புரட்சிகர கருத்துக்களையும் எதிரொலிக்கும் படங்கள் என 200க்கும் மேற்பட்ட படங்களை வழங்கியவர் அவர். தனது பேச்சு – மூச்சு அனைத்திலும் தமிழை மட்டுமே சுவாசித்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்த தமிழர்! தான் ஈட்டிய செல்வத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி மக்களுக்கு உதவி வந்த கொடை வள்ளல்.
இவரது கொடை வள்ளலால் கருப்பு எம்.ஜி.ஆர் என்று தமிழக மக்களால் பேரன்போடு அழைக்கப்பட்டவர். இவரது நடிப்பாலும், நாட்டுப் பற்றாலும் கலைமாமணி விருது, எம் ஜி ஆர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றதோடு இந்திய அரசால் ‘சிறந்த குடிமகனுக்கான’ விருதையும் பெற்றுள்ளார்.
தனது நடிப்பாலும் கோடை வள்ளல் தன்மையாலும் உலகெங்கும் பரவி வாழும் தமிழக மக்கள் மனதில் நீக்கா இடம் பிடித்தவர் நண்பர் விஜயகாந்த் அவர்கள். திரைத்துறை, அரசியல் ஆகியவரையெல்லாம் கடந்து எங்கள் இருவருக்குமான நட்பும், எங்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையேயான பாச உறவும் ஆழமானது.
நல்லுள்ளம் கொண்ட இவரது மறைவு எனக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். தமிழக மக்களால் மனநிறைய கேப்டன் என்றழைக்கப்பட்ட நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து தவிக்கும் அண்ணியார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவரது மகன்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும், தமிழக மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது நடிப்பாற்றலும் நல்லுள்ளமும் தொண்டுள்ளமும் இந்த மண் இருக்கும் வரை போற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். டாக்டர் ஏ. சி. சண்முகம் நிறுவனர் தலைவர் புதிய நீதிக்கட்சி #Vijayakanth #DMDK
