Home Uncategorized வில்லிவாக்கம் ஏரியில் 19. 6 ஏக்கர் பரப்பில் பொழுதுபோக்கு பூங்கா

வில்லிவாக்கம் ஏரியில் 19. 6 ஏக்கர் பரப்பில் பொழுதுபோக்கு பூங்கா

சென்னை வில்லிவாக்கம் ஏரியில் 19. 6 ஏக்கர் பரப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றன. தொங்கும் கண்ணாடி பாலம், உள்ளரங்க விளையாட்டுகள், மெய் நிகர் திரையரங்கம் என அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது வில்லிவாக்கம் பொழுதுபோக்கு பூங்கா. இடது புறம் பாடி மேம்பாலத்தின் பரபரப்பாக செல்லும் வாகனங்கள், வலது புறத்தில் ரம்யமான வில்லிவாக்கம் ஏரி..

இதற்கு இடையில்தான் அமைக்கப்பட்டு வருகிறது இந்த பொழுதுபோக்கு பூங்கா. சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனத்தோடு இணைந்து அரசு மற்றும் தனியார் நிதியில் இணைந்து (அரசு தனியார் பங்களிப்பு திட்டம்) வில்லிவாக்கம் ஏரியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான முயற்சியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறது.

மொத்தமாக 39 ஏக்கர் அளவு கொண்ட வில்லிவாக்கம் ஏரியின் 19. 6 ஏக்கர் அளவிற்கு பொழுதுபோக்கு பூங்காவானது அமைக்கப்பட உள்ளது. நீர் நிலைக்கு அருகே உள்ள 9 ஏக்கர் பரப்பில் குழந்தைகளுக்கான உள்ளரங்க விளையாட்டுகளும், உணவு திடலும் அமைக்கப்பட உள்ளன.

சுமார் 100 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைகிறது. குழந்தைகள் விளையாடக்கூடிய 70 புதிய உள்ளரங்க விளையாட்டுகளுக்கான மேடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெய் நிகர் திரையரங்கமும், செயற்கை பனி அரங்கமும் அமைக்கப்பட உள்ளன. 350 மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடி இழைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏரியின் அழகையும் புதிய அனுபவத்தையும் கொடுக்கும் இந்தப் பாலம் ஆனது ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கண்ணாடி இழை பாலம் மட்டும் 15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்ணாடி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version