கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதையொட்டி கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. விருத்தாசலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடந்தன. கடந்த 2-ந் தேதி மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானைகளில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

