வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக, 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில், 6 செ.மீ., மழை பதிவானது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், 4 செ.மீ., வரை மழை பதிவானது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாகக் காணப்படும்.
ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
