தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தோற்றுவிப்பட்டதாக கருதப்படும் 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில் சென்னை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
2004-ம் ஆண்டில் இருந்து சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய திமுகவின் முதல்வர் பேரறிஞர் அண்ணா, 1969ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். ஆனாலும், சென்னை தொடர்ந்து மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர், 1996 ஜூலை 17ம் தேதி, தமிழகத்தினை அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த மு. கருணாநிதி, மெட்ராஸ் எனும் பெயரினை சென்னை என மாற்றினார். அன்று முதல் இந்த தூங்கா நகரம், சென்னை என அழைக்கப்ட்டு வருகிறது. 1639ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட சென்னையின் வயது 385 ஆக இருந்தாலும், ”சென்னை டே” எனப்படும் சென்னை தினம் முதல் முதலில் கொண்டாடப்பட்ட தினம் 2004 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியில் இருந்துதான். அன்று முதல் இன்று வரை மிகவும் கோலாகலமாக இந்த சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த மெட்ராஸ்டே.முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது
அதே சமயம் சென்னை பட்டிணம் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சங்கம் காலம் தொட்டு எப்படி கீழடி போன்ற இடங்கள் உள்ளனவோ, அதைபோல சென்னையும் ஒரு சிறந்த நகரமாக 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. வெள்ளைக்காரர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு துதி பாடும் ஒரு கூட்டம் தவறான தகவல்களை வழங்கி ஏதோ ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் சென்னை வந்தது என்று ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன் மயிலையில் திருவள்ளுவர் வாழ்ந்தார், அவர் குறளை இங்கே 2000 ஆண்டுகளுக்கு முன் வழங்கினார் என்றால் , மயிலாப்பூர் வயது குறைந்தது 2000 என்றால், சென்னைக்கு எப்படி வயது 383 ஆக இருக்க முடியும்? சென்னையின் பல்வேறு பகுதிகளில் 1000 ஆண்களுக்கு முன் நிறுவப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன, நூற்றுகணக்கான கோவில்கள் 1000 முதல் 1500 ஆண்டுகள் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் அரசின் கலை பண்பாட்டுத் துறை, தொல்பொருள் ஆராய்ச்சி துறை, ஆதாரபூர்வமாக தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும் போது இந்த மெட்ராஸ் டே கூட்டம் எப்படி சென்னையின் வயது, வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்து, 383 என்று சொல்ல முடியும்? இது அப்பட்டமான பொய் பிரசாரம், உண்மையான வரலாற்றுக்கு எதிரானது என்று குரல் கொடுப்போருமுண்டு.
இப்படியப்பட்ட சென்னை என்றால் பலருக்கு இன்றும் நினைவுக்கு வருவது, தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, தலைவர்கள் சமாதி, கூவம் ஆறு, சென்னை சென்ட்ரல், வடசென்னை கால்பந்து, கானா பாடல், கோடம்பாக்க சினிமா பிரபலங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ், மெட்ரோ ரயில், கோயம்பேடு பேருந்து நிலையம் என சென்னையின் பல முகங்களில் ஒன்றை நினைவு கூறுவார்கள். இன்னும் ஒரு சிலர் சென்னை வெயில், டிசம்பர் மழை வெள்ளம் குறித்து பேசுவார்கள். என்னதான் இப்படி பல முகங்களைக் கொண்டு கொஞ்சமும் உறக்கமும் இல்லாமல் இயங்கி வரும் சென்னையின் உறங்கா விழிகள் பற்றி யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை, அதனை தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்தவர்களால் 1639ஆம் ஆகஸ்ட் 22ம் தேதி உருவாக்கப்பட்ட நாளில் இருந்து, இந்தக்கணம் வரையிலும் சென்னை உறங்கியதாக வரலாறே கிடையாது. சென்னை தவழ்கிறது, சென்னை நடக்கிறது, சென்னை ஓடுகிறது அதுவும் வேகமாக, சென்னை பறக்கிறது. இப்படி எதோ ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருக்கிறதே தவிர, சென்னை ஓய்வு எடுக்கிறது என்ற ஒரு வரலாறு கிடையவே கிடையாது. தூங்கா நகரமாக சென்னை இருக்க முக்கிய காரணம், பல கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களின் கடைசிப் புகலிடமாக சென்னை இருப்பது தான். சென்னையின் பூர்வகுடிகள் அளித்திருக்கும், ”சென்னைக்குப் போனா பொழச்சுக்கலாம்” எனும் உத்வேக மொழி கேட்டவர்களில், ரயில், பேருந்து, விமானம் என அனைத்து வகை போக்குவரத்தின் வழியே கனவை, வாழ்க்கையை, குடும்பத்தின் எதிர்கால நலனை நெஞ்சில் சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வருகிறர்கள். இப்படி தன்னை நம்பி வருபவர்களை எல்லாம் உடனே மேலே தூக்கிவிடும் பழக்கம் சென்னைக்கு கிடையவே கிடையாது. முதலில் கொஞ்சம் சோதித்து பார்த்துவிட்டு, அதன் பின்னர் அவர்களை அப்படியே தன்னோடு சேர்த்து வைத்துக்கொண்டு அவர்களை ஆளாக்கி அழகு பார்க்கும் நகரம். சென்னை கற்பிக்கும் வாழ்க்கை பாடத்தின் முதல் அத்தியாயத்தை கடப்பது மட்டும் தான் கடினம், அதன் பின்னர் நம் கனவை நனவாக்கும் அனைத்து வேலைகளையும் நாம் செய்யும் போது, தட்டுத்தடுமாறி பரிதவிக்கும்போது, ’நான் இருக்கிறேன் கவலை படாதே’ எனச்சொல்லி பக்கபலமாக இருக்கும். ராத்திரி ரவுண்ட் அப் மூலம் ஆந்தையாரை உருவாக்கியதும் இதே சென்னைதான்.
சென்னையைப் பற்றி கேட்பவர்களிடத்தில் இங்கிருக்கும் கட்டிடங்களும், சாலைகளும், பாலங்களும், கடற்கரையும் தான் சென்னை என சொல்வதற்கு சென்னை வாசியான நாம் தேவையில்லை, அதற்கு கூகுள் ஆண்டவர் போதுமே. கூகுளின் கண்களுக்கு அகப்படாமல், இந்த தூங்கா நகரத்தில் இப்போதும் எறும்பு போல் தன் கனவை துரத்திச் செல்லும் இங்கிருக்கும் மனிதர்களும் மக்களும் தான் சென்னை. அவர்கள் தான் இந்த சென்னையை அரும்பாடுபட்டு உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சமும் முகம் சுளிக்காமல் தூய்மை பணிகளை திறம்படச் செய்யும் தூய்மை பணியாளர்கள், காசி மேட்டில் இரவெல்லாம் கடலில் மீன் பிடிக்க, உயிரை பணயம் வைத்து அதிகாலை கரை திரும்பும் மீனவர்கள், பல்கலைக்கழக விடுதியில் விடிய விடிய தன் ஆராய்ச்சிக் கட்டுரையை தயார் செய்யும் ஆய்வு மாணவர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் கனவோடு வந்திறங்கிய புதிய சென்னை வாசியை பத்திரமாக இறக்கிவிட்டு ”ஆல் த பெஸ்ட்” சொல்லும் நடத்துனர், விடிய விடிய உணவு டெலிவரி செய்ய இருசக்கர வாகனங்களை இயக்கும் கல்லூரி மாணவர்கள் என உழைக்கும் மக்களும் சேர்ந்தது தான் சென்னை.
‘இதெல்லாம் ஓர் ஊரா’ என்று தூற்றுபவர்களும் உண்டு. ‘இது நம்ம சென்னை’ என்று ஆராதிப்பவர்களும் உண்டு. சென்னை, தெரியாதவர்களுக்குப் புரியாத புதிர். தெரிந்தவர்களுக்கோ சொர்க்கம். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் சென்னையைப் பற்றி அசைபோட சுவாரசியங்கள் கொட்டிக்கிடக்கும் ஊரான் இச்சென்னை போற்றி பாட ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதும் மகிழ்சிதானே?
