பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த ரதங்கள், புறப்படுவதற்கு முன்னால், புரி க்ஷேத்ரத்தின் அரச பரம்பரையில் வந்தவர், தங்கத் துடைப்பத்தால் ரதங்கள் பயணிக்கத் தொடங்கும் வழியை சுத்தம் செய்த பின்னரே, ரத யாத்திரை தொடங்கும்.
முதலில் ஸ்ரீ பலராமர் ரதமும், அடுத்ததாக ஸ்ரீ சுபத்ராவின் ரதமும் , கடைசியாக ஸ்ரீ ஜகன்நாதரின் ரதமும் இருக்க வேண்டும் என்பது நியதி.
யாத்திரை என்கிற கணக்கில், ஒன்பது நாட்கள் முடிந்தாலும், அதன் பிறகு சில சடங்குகளை முடித்த பின்பு இம்மாதம் பத்தொன்பதாம் தேதி, நீலாத்ரி பிஜே என்கிற சடங்கு, சம்பிரதாயத்திற்குப் பிறகே (அதாவது ஸ்ரீ ஜகந்நாதர் தனது பத்தினியான ஸ்ரீ மகாலட்சுமிக்கு இனிப்பு ரசகுல்லாவை ஊட்டி விட்ட பிறகே) ரத யாத்திரையை நிறைவு செய்கிறார்கள்.
ரத யாத்திரை முடிந்த பின்பு, ரதங்கள் பிரிக்கப்பட்டு, உபயோகித்த மரக்கட்டைகளைக் கொண்டு பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அந்தப் பொருட்களை பக்தர்கள், தாங்கள் பகவானிடம் இருந்து பெற்ற ஆசீர்வாதமாக நினைத்து மிகவும் பயபக்தியுடன் வாங்கிச் செல்கிறார்கள்.
இதன் மூலம் இந்த ரதங்களைத் தயாரிக்கும் தச்சர்கள், வர்ணம் பூசுபவர்கள் இன்னும் பிற தொழிலாளர்களுக்கு ஜீவாதாரத்திற்கு உண்டான வழி கிடைக்கின்றது

