இந்தியாவில் கடைசியாக நுழைந்த பெரிய ஐரோப்பிய நாடு ஃப்ரான்ஸ்தான். 1498இல் முதல் ஆளாக வாஸ்கோ-ட-காமா தொடங்கி போர்ச்சுகீசியர்களும், அதன்பின், 1605இல் நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்களும், 1611இல் ஆங்கிலேயர்களும், 1620இல் டென்மார்க்கின் டேனிஷ்காரர்களும் இந்தியாவுக்கு வந்து காலூன்றியிருந்த நிலையில், 1674இல்தான் ஃப்ரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியில் காலூன்றினர். இவர்களில் சோழமண்டலக் கடற்கரை, கேரளம் ஆகியவற்றில் சில பகுதிகள், சூரத் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்திய டச்சுக்காரர்கள், திருவனந்தபுரத்தின் அரசர் மார்த்தாண்ட வர்மாவிடம் 1741இல் தோற்றதோடு படிப்படியாக வெளியேறத் தொடங்கி, 1825இல் முழுமையாக வெளியேறிவிட்டனர். தரங்கம்பாடி, வங்கத்தில் ஸ்ரீராம்பூர், நிக்கோபார் தீவுகள் ஆகிவற்றில் ஆதிக்கம் செலுத்திய டேனிஷ்காரர்கள், நெப்போலியப் போர்களின்போது ஏற்பட்ட நெருக்கடிகளால், 1869இல் வெளியேறினர். 1839இல் ஸ்ரீராம்பூரை ஆங்கிலேயர்களுக்கு விற்பனை செய்த, டேனிஷ்காரர்களிடமிருந்து நிக்கோபார் தீவுகளை 1845இல் விலைக்கு வாங்க இத்தாலி முயற்சித்து, பாதியில் நின்றுபோனது. பின்னர் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இவர்களது பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன.
புதுச்சேரி, காரைக்கால், சோழமண்டலக் கடற்கரையில் யேனாம், கேரளக் கடற்கரையில் மாஹே, வங்கத்தில் சந்தன்நகர் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ஃப்ரெஞ்சுக்காரர்களும், கோவா, டையூ, டாமன், தாத்ரா, நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த போர்ச்சுகீசியர்களும், ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது இந்தியாவைவிட்டு வெளியேறவில்லை.
1961இல் ராணுவ நடவடிக்கைக்குப்பின்னர்தான் போர்ச்சுகீசியர்கள் வெளியேறினர். (விளக்கமாக டிசம்பர் 19 அன்று பார்க்கலாம்!) ஃப்ரான்சிடமிருந்த மசூலிப்பட்டணம், கோழிக்கோடு, சூரத் ஆகியவை 1947இலேயே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், 1948இல் ஓர் ஒப்பந்தமும் எட்டப்பட்டது.
அதன்படி, 1950 மே 2இல் சந்தன்நகரும், 1954 நவம்பர் 1இல் புதுச்சேரி, காரைக்கால், யேனாம், மாஹே ஆகியவையும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நான்கும் சேர்ந்தது புதுச்சேரியானது. ஃப்ரெஞ்சுப் பாராளுமன்றம் இதற்கான ஏற்பளிப்பு செய்த 1962 ஆகஸ்ட் 16, புதுச்சேரியின் விடுதலை நாளானது.
