Home Uncategorized டெல்லி: அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து.. 9 பேர் பலி!

டெல்லி: அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து.. 9 பேர் பலி!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு டெல்லியின் பாலம் கிராமப் பகுதியில் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்பு பகுதியில் இந்த அசம்பாவிதம் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இன்று அதிகாலை குடியிருப்பாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் திடீரென தீ பரவியுள்ளது.

தரைத்தளத்தில் உள்ள மின்சார மீற்றர்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து தீயானது மிக வேகமாக கட்டிடத்தின் மற்ற நான்கு தளங்களுக்கும் பரவியுள்ளது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்புத் துறையினர் பல வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்த கொடூர தீ விபத்தில் சிக்கி உடல் கருகியும், மூச்சுத்திணறல் காரணமாகவும் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

கட்டிடத்திலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக அருகிலுள்ள ​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி போலீஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் முறையான தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும், மின்சாரக் கசிவுக்கான சரியான காரணம் குறித்தும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version