திண்டிவனம், கவேரிபாக்கம், சுப்பாராயன் தெருவில் வசித்து வந்தவர் ராஜு. திண்டிவனம் நகரில் தொழிற்கூடம் நடத்தி வந்தார். இவரின் மனைவி கலைச்செல்வி வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாரித்து வந்தார். இவர்களின் மகன்கள் கோவர்த்தனன் மற்றும் கௌதமன்.
மூத்த மகன் கோவர்த்தனனுக்கு திருமணமாகி தீபகாயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர் பிரபல அரசியல் கட்சி பிரமுகர். இளைய மகன் கௌதமனுக்கு திருமணமாகவில்லை.
கோவர்த்தனன் ஊதாரிதனமாக சுற்றி கொண்டு சொத்தை அழித்து வந்தார். இளைய மகன் கௌதமன் பொறுப்பாக குடும்ப தொழிலை பார்த்து வந்தார்.
புதிய தொழில் தொடங்க பணம் கேட்டு குடும்பத்தினரை கோவர்த்தனன் நச்சரித்து வந்தார். குடும்பத்தினர் பணம் கொடுக்காததால் அவர்கள் மீது கடும் கோபத்தில் கோவர்த்தனன் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த15.05.2019 அன்று அதிகாலை 3.00 மணிக்கு, ராஜுவின் பங்களா வீட்டில் அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கதில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு மூடப்பட்டு இருந்தது. தொடர்ந்து அலறல் சத்தமும், வீட்டிலிருந்து நெருப்பும் புகையும் வந்ததால் அக்கம் பக்கத்தினர் வாசல் கதவை உடைத்து திறந்து சென்று பார்த்த போது ராஜு, கலைச்செல்வி, கௌதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர். AC வெடித்து தனது அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் இறந்து விட்டதாக கோவர்த்தனன் அனைவரிடமும் கூறினார். இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
3 பேர் இறந்த வழக்கு என்பதால் இதனை DSP கனகேஸ்வரி விசாரித்தார். போலீசார் புலன் விசாரணையில் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீபகாயத்திரி ஆகியோர்தான் ராஜு, கலைச்செல்வி மற்றும் கௌதமன் ஆகியோர் தூங்கும் போது அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ள விஷயம் தெரிய வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிக்குண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
அரசு சார்பாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் N. விஜயராஜ் ஆஜரானார். அரசு தரப்பில் 19 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 35 ஆவணங்கள் மற்றும் 17 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று (26-10-2021) தீர்ப்பு வழங்கிய நீதிபதி திரு. P.வேல்முருகன், கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்ரி ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்களுக்கு தலா நான்கு தூக்கு (120பி & 302 (3 counts) தண்டனை வழங்கினார். மேலும் வெடிமருந்து பொருட்கள் சட்டம் பிரிவு 3(a) 4(b) படி ஆயுள், தண்டனையும், பிரிவு 436 இ.த.ச படி ஆயுள் தண்டனையும், பிரிவு 201 இ.த.ச படி தலா 7 வருடம் கடும்காவல் தண்டனையும், அபாரதமாக மொத்தம் 6 லட்சம் ரூபாயும் விதித்து தீர்ப்பளித்தார்.
1 வயது கை குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜரான கோவர்த்தனனும் அவரது மனைவி தீபகாயத்ரியும் தீர்ப்பை கேட்டவுடன் கதறி அழுதனர்.
இந்த வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர், ஆனாலும் சூழ்நிலை சாட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கை, ரசாயன பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை வைத்து எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக அரசு வக்கீல் விஜயராஜ் தெரிவித்தார்.
(பொய்யான புகாரை கோவர்த்தனன் கொடுத்தது, வீட்டை பூட்டி கொண்டு திறக்காமல் இருந்தது போன்ற செயல்கள் சந்தேகத்தை அவர் பக்கம் திருப்பியது. AC மெஷின் வெடிக்கவில்லை உருகிதான் இருந்தது. மேலும் இறந்து போன ராஜுவின் உடலில் வெட்டு காயங்கள் இருந்தது. ஒரே வீட்டில் வசித்தாலும் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோருக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை. எரிந்த பொருட்கள் குறித்த ரசாயன பகுப்பாய்வில் பெட்ரோல் தென்பட்டது.)
