Sunday, March 22, 2026
HomeUncategorizedநேசிப்புடன் வாசிப்போம்!

நேசிப்புடன் வாசிப்போம்!

கண்ணொளியால் கண்டு

மெளன மொழியால்

மெல்ல மேய்ந்து,

உள்ளொளியைத் தூண்டி

உலகத்தை உணர்த்தும்

உன்னதம்!

 

அகலமும் நீளமுமாய்

அர்ப்பணிப்போடு

அறிவு நிலத்தை உழுது

ஆகச்சிறந்த ஞானம்பெற

ஆற்றல் தரும் தவம்!

 

“உள் கடந்து” செல்வதே

“கடவுள்” என்பர்..

இதுவும் அப்படித்தான்!

சுயத்தை உணரவைக்கும்

சூட்சமம்!

 

மாதா, பிதா, குரு

வழிநடத்தும் வாழ்வின்

தத்துவத்தை

புத்தெழுச்சியாய் புதுப்பிக்கும்

பெருந்தெய்வம்!

 

இது-

அறிவுப் பெட்டகத்தை  

ஆடம்பரப் பொருட்களால்

அலங்கரிப்பதல்ல..

மாசுபடிந்த கண்ணாடியை

திருநீறுகொண்டு துடைப்பது போன்றது!..

 

எதிர்காலத்தைச் செதுக்க

எத்தனையோ உளிகளுண்டு… அந்த

உளிகள் பணிசெய்ய

உத்வேகம் தருவதே

வாசிப்பின் வல்லமை!

 

தூரதேசங்களின் தரிசனத்தை

ஈரம் காயாமல் காட்டும்

ஈடற்றது!

 

பரந்து விரிந்த

பிரபஞ்சவெளி கோள்களை

பக்கத்தில் காட்டும்

தொலைநோக்கி!

 

இதயத்தின் துடிப்பை

இளஞ் சூட்டில்

இதமாய் உணரவைத்து

பாதுகாப்பை உறுதி செய்யும்

தாயின் அரவணைப்பு!

 

புத்தியைத் தெளிவித்து

பக்குவப்படுத்தும் அறிவாயுதம்

புத்தக வாசிப்பே..

நேசிப்புடன் வாசிப்போம்!

 

– M. பழனிவாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments