கோவை, மாவட்டம், வால்பாறையில் தமிழக அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஏராளமான எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் காலம் காலமாக எஸ்டேட் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் பீகார், ஒடிசா, அசாம் என வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிகளில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, கரடி , காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதி உள்ளது. அப்பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியரும் வசித்து வந்தனர். அவர்களது மகள் ரோஷினி குடியிருப்பு பகுதி அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை தாக்கியது. இதை பார்த்த சிறுமியின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை கூப்பிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் குழந்தையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறை அனைவரும் வந்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர் மோப்ப நாய்களுடன் வனத்துறையினர் 18 மணி நேரம் போராடி குழந்தையின் தலை மற்றும் உடலை தனித்தனியாக கண்டுபிடித்தனர். இந்நிலையில் குழந்தையை பிடித்த சிறுத்தை தற்போது வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியுள்ளது.

