சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் மரண வழக்கு, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் அஜித் குமார் கொலை வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
*இடது கையில் மூன்று இடங்களில் சிகரெட் சூடு
*மூளையில் இரு இடங்களில் ரத்த கசிவு
*மண்டையோட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம்
*நாக்கை கடித்ததை போன்ற நிலை
*தலையில் அடிபட்டதால் வலிப்பு
*கண்கள் சிவந்து வீங்கி உள்ளன
*காதுகளில் இரத்த கசிவு
*உடலில் ஆறு பெரிய காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன
*மொத்தமாக உடலில் 50க்கும் மேற்பட்ட காயங்கள்
*இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவு
*கல்லீரலில் ரத்தக் கசிவு
இவை அனைத்தும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

