ஏழு ஜென்ம பாவங்களைப் போக்கும் சூரிய ஜெயந்தி –
ரத சப்தமி 2026
வழிபாட்டு முறைகள் மற்றும் முக்கிய விபரங்கள் ..
சூரிய பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கித் திருப்பிப் பயணத்தைத் தொடங்கும் புனித நாளே ‘ரத சப்தமி’. தை மாத வளர்பிறை சப்தமி திதியில் கொண்டாடப்படும் இந்த நாள், சூரிய பகவானின் பிறந்தநாளாகவும் (சூரிய ஜெயந்தி) போற்றப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தத் திருநாள் அமைகிறது.

இந்த ஆண்டு ரத சப்தமி சூரியனுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை வருவது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.
- • தேதி: ஜனவரி 25, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
- சப்தமி திதி ஆரம்பம்:
ஜனவரி 25, அதிகாலை 12:39 மணி
- சப்தமி திதி முடிவு: ஜனவரி 25, இரவு 11:10 மணி
- புண்ணிய கால நீராடல் அதிகாலை 04:56 AM முதல் 06:36 AM வரை
- சூரிய உதயம் (அர்க்கியம் விட உகந்த நேரம்): காலை 06:36 AM
எருக்கன் இலை குளியல் – முறை மற்றும் பலன்கள்
ரத சப்தமி அன்று மிக முக்கியமான வழிபாடு ‘எருக்கன் இலை’ வைத்து நீராடுவது ஆகும்.

- ஆண்கள்: ஏழு எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் விபூதி வைத்து நீராட வேண்டும்.
- பெண்கள்: ஏழு எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்து நீராட வேண்டும்.
- வைக்கும் முறை: தலையில் ஒன்று, இரண்டு தோள்பட்டைகளில் தலா இரண்டு, இரண்டு கால்களில் தலா இரண்டு என மொத்தம் ஏழு இலைகளை வைத்து, சூரியனை நோக்கியபடி நீராடுவது மரபு.
பலன்: இவ்வாறு செய்வதால் கடந்த ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும், தீராத நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும் என்பதும் ஐதீகம்.
வழிபாட்டு முறைகள்
- தேர்க்கோலம்: வாசலில் சூரிய ரதம் போன்ற கோலமிட்டு, அதன் நடுவில் சூரிய-சந்திரர்களை வரைய வேண்டும்.
- நிவேதனம்: சூரிய ஒளி படும் இடத்தில் புதுப் பானையில் பால் பொங்க வைத்து, சர்க்கரைப் பொங்கல் மற்றும் உளுந்து வடை நிவேதனம் செய்வது சிறப்பு.
- அர்க்கியம்: சூரிய உதயத்தின் போது செப்புப் பாத்திரத்தில் நீர் எடுத்து, சூரிய பகவானை நோக்கி ‘அர்க்கியம்’ (நீர் சமர்ப்பித்தல்) விட வேண்டும்.
- மந்திரங்கள்: ‘ஆதித்ய ஹ்ருதயம்’ அல்லது சூரிய அஷ்டகம் பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும்.
சிறப்பு அம்சம்:
திருப்பதி போன்ற முக்கிய ஆலயங்களில் ரத சப்தமி அன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் ‘மினி பிரம்மோற்சவம்’ வெகு விமரிசையாக நடைபெறும்.

