ஒரே பிறப்பில் இரண்டு அவதாரங்கள்! – பகுதி1
மு.பழனிவாசன்
பக்தியின் பாதை மிகவும் சுகமானது. புலனடக்கம், மனதடக்கம், மனிதநேயம் ஆகியவற்றால் தன் கைவசப்படுத்துவது அன்பர்களுக்கு ஒரு சிறந்த சாதகம். மிகப்பெரிய சாதகங்கள் செய்யாமலும் கூட பக்தியும், அதன்மூலம் பெருமையும் பெறுபவர்கள் வெகுசிலருண்டு. வேதங்கள், உபநிஷதங்கள், சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள், மறையோதும் பாடல்கள் போன்ற எதையும் கற்றுத்தேறாதவர்களுக்கும் இறைவன் அசாத்தியமான வாழ்வினை அள்ளி வழங்குவதுண்டு. அவையெல்லாம் அவரவர் பூர்வ புண்ணியத்தின் அசாத்திய சேமிப்பு. ஆம். நம் சனாதனம் இப்படித்தான் எடுத்துக் காட்டுகிறது.
”ராத்னாகரன்” என்கிற பெயருடன் மிகப்பெரிய கொள்ளைக்காரனாக பொதுமக்களின் நெஞ்சுக் குலைகளை நடுநடுங்க வைத்த ஒருவர்,”வால்மீகி”யாகி இராமாயணத்தை தொகுத்து யுகங்ளைக்கடந்தும் நம் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

ஆன்மீகம்- ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் வழங்கும் அரிய கலையாகிய “யோகக்கலை” இவ்வுலகிற்கு பதஞ்சலி முனிவரால் அருளப்பட்டதாகும். அந்த பதஞ்சலி முனிவர் தன் பூர்வாசிரமத்தில் கொள்ளைக்காரனாக நடுங்க வைத்தவர்தான் என வரலாறு வாசிக்கிறது.
இது ஏதோ புராண, இதிகாச, வரலாற்று காலங்களில் மட்டுமே நிகழ்ந்தன. பக்தி பகல்வேஷமாகவும், பணவளம் கொழிப்பதற்காக இறைவனை வேண்டிக்கொள்வதற்கான ஆயுதமாகவும் மாறிவிட்ட இக்காலத்தில் மெய்யடியார் வாழ்வியல் சாத்தியமா? என்றால், ஆம். சத்தியமாக சாத்தியம்தான். அப்படிப்பட்ட ஒரு நண்பர் தர்மபுரி பக்கத்தில் எங்கேயோ ஒரு ஊரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அப்போது அவர் வயது என்னவோ 25 வயது என அறிந்தேன். நான் சொல்வது சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. சென்னையில் சாலிகிராமத்தில் ஒரு அறையில் எடுத்து தங்கி, திருமண மண்டபங்களுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். எந்நேரமும் மதுவாசனையோடு இருப்பவர்தான். நன்கு அசைவம் சாப்பிடுவார். புதுப்புது கெட்ட வார்த்தைகளை பிரயோகம் செய்யக்கூடியவர். சிற்சில குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தவர்தான். முழுக்க முழுக்க நாத்திகவாதி. என்னுடைய ஆன்மீக நம்பிக்கையை அப்பட்டமாக கேலி பேசக்கூடியவராகவும் இருந்தார். ஆனால், இவற்றியெல்லாம் புறம்தள்ளி சில நற்பண்புகள் அவரிடத்தில் இருந்தன. பொதுவாக என்னை “குருநாதா அல்லது சார்” என்றுதான் அழைப்பார். ஒருநாள் அவரது ராசி, நட்சத்திரம் பற்றிய விவரம் கேட்டேன். தெரிந்து கொண்டேன். பிறகு எதேச்சையாக ”இவ்வளவு பேசுகிறாய். நிச்சயம் ஒருநாள் நான் ஒரு கோயில் கட்டியிருக்கிறேன் என்று வந்து நிற்பாய்” என்று நான் கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். அந்த சம்பவத்தையும், அவரையும் முற்றிலும் மறந்துவிட்டேன். அவரை இடைப்பொழுதிலும் பார்த்ததில்லை. அவருடைய அலைபேசியும் மாறிவிட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து ஒருநாள், என்னைத்தேடி ஒருவர் நான் குடியிருக்கும் வீட்டு வாசலுக்கு சாமியார் ஒருவர் வந்திருப்பதாக கூறினர். நான் மாடிப்படியிறங்கிச் சென்றேன்.
அழுக்கான காவியுடையுடன், துளசிமணி மாலை, ருத்திராட்சம் அணிந்திருந்த தோற்றத்துடன் இருந்த அந்த நபர் வேறு யாருமில்லை. எனது நண்பர் அதே செந்தில் குமாரேதான்! “குருசார்.. நீங்க சொன்ன மாதிரியே நடந்திடுச்சி. என் பாட்டி தந்த சிறு இடத்தில் எங்கள் குலதெய்வத்திற்காக ஒரு கோவில் கட்டி விட்டேன். நீங்கள் சொன்னது பலித்து விட்டது. இதோ கும்பாபிஷேக பத்திரிக்கை. அவசியம் வாருங்கள்.”
ஏற்கனவே நான் சொல்லியிருந்த விஷயமாதலால் எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. ஆனால், மகிழ்ச்சியானது பெருக்கெடுத்தது.”சரி. வாங்க செந்தில்.. டீ குடிக்கலாம்” என்றேன்.

”நமசிவாய.. நான் விரதத்தில இருக்கேன். பார்ப்போம்” என்று கிளம்பியவர்தான். அவர் சென்றபின், பத்திரிக்கையைப் பார்த்தேன். அதில் ஆலய நிறுவனர் என்கிற இடத்தில் ”செந்தில்குமார்” என்று இருந்தது. எந்த அடைமொழியும் இல்லை. கடைசியாக அன்று பார்த்ததுதான். நான் கும்பாபிஷேகத்திற்குச் செல்லவில்லை. தொடர்பும் விட்டுப்போனது. ஆனால், அந்த நண்பரை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இறைவன் என்றாவது ஒருநாள் அவரைக் காட்டுவான் என்கிற நம்பிக்கையுள்ளது. ஒருவேளை என்னுடன் சூட்சம ரூபத்தில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறாரோ என்னவோ!!!? இறைவனுக்கே வெளிச்சம்!
நான் புதுயுகம் தொலைக்காட்சியில் “பலன் தரும் பரிகாரக்கோயில்கள்” நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்தச் சென்றேன். மதுராந்தகத்திலிருந்து முதுகரை என்னும் ஊர்வழியாக கூவத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால் வருவது “சித்திரவாடி”. இங்கே உள்ள ஒரு சிறிய மலைமீது அமைந்திருந்த”ஸ்ரீ லெஷ்மி நரசிம்மர்’ கோயிலுக்கு என் குழுவினருடன் சென்றேன். மிக அற்புதமான சூழலில், அமையான திருத்தலம் அது.”ஸ்ரீ வேணுகோபால பெருமாள் அறக்கட்டளை”முன்னெடுத்து 2007- ல் கட்டிமுடிக்கப்பட்டது. அதன் நிறுவனரை நான் சந்தித்து பேசியபோது, அவர் தன் அதீத பேச்சுகளால் ஒரு சிந்தனைச் சிற்பியாகவோ, சாஸ்திர விஷயங்களில் விற்பன்னராகவோ தன்னை காட்டிக்கொள்ள வேயில்லை. அவரிடம் காணப்பட்டதெல்லாம் அமைதியான, அலட்டல் இல்லாத, பக்குவமான பேச்சு. இவரைப்பற்றி கேள்விப்பட்டு, எதேச்சையாக சந்தித்தும் உரையாடிய அப்போதைய நேபாள நாட்டின் மன்னர் ஞானேந்திரா அவர்கள் 108 சாளக்கிராம கற்களால் மாலை ஒன்றை செய்வித்து, இத்திருத்தலத்தின் ஸ்ரீ லெஷ்மி நரசிம்மருக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார். அது இப்போதும் நரசிம்மரை அலங்கரிக்கிறது. அதன் நிறுவனர் அவர்கள் மெத்தப்படித்து, மத்திய அரசுப்பணியில் உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். எஞ்சிய தன் வாழ்நாளை ஆன்மீகப்பாதையில் மக்களுக்கு உதவிட முன்னெடுத்த விஷயமே, அந்த அறக்கட்டளையும், ஸ்ரீ லெஷ்மி நரசிம்மரின் திருக்கோயிலும். நான் ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்து திரும்பி விட்டேன். ஒரே நாளில் அதுபற்றிய ஸ்கிரிப்ட், இரண்டு நாட்கள் படத்தொகுப்பு, குரல் பின்னணி மூன்று மணிநேரம், என எபிஸோடை தயாரித்து முடித்து விட்டேன். ஆனால், அதன் பின்னால், எவ்வளவு பெரிய மாஹிமித்யம், ஒரு தனி மனிதனின் எத்தனை ஆண்டுகால உழைப்பு! அதிலும் அவருடைய இரண்டு விதமான பரிமாணங்கள்! வாழ்நாளின் முற்பகுதியில் மத்திய அரசாங்கத்தில் (ஐ.ஏ.எஸ்) உயர்பதவி! பிற்பகுதியில், போலித்தனமில்லாத ஆன்மீகவாதி! அதிலும் அவர் அதிகம் விரும்பி திட்டமிடாதது!
இவையெல்லாம், எப்படி சாத்தியமாகின்றன? இங்குதான் கவிஞர் கண்ணதாசனின் பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்” என்னும் வரிகளை நினைவிற்கு கொண்டு வந்து பிரமிக்க வேண்டியிருக்கிறது.
(இந்த தலைப்பில் எழுதுவதற்கான உந்துதல் தந்த முக்கிய கட்டம் பகுதி -2 – இல் வெளிவரும்.)
மு.பழனிவாசன்
Also Read:

