அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் உடனான நீண்டகால அமைதி உடன்படிக்கையை இறுதி செய்வதற்கும், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகத் திறந்து விடுவதற்கும் இந்த இடைவெளி உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ இலக்குகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாகவும், ஈரானின் 10 அம்ச முன்மொழிவு பேச்சுவார்த்தைக்கு உகந்ததாக இருப்பதாகவும் கூறியுள்ள டிரம்ப், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்தப் பெரும் சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைப்பது அமெரிக்காவிற்கும், பிற நாடுகளுக்கும் கிடைத்த பெருமை என்றும் தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

